அபோலோ புற்றுநோய் மருத்துவமனையின் புதிய சாதனை!

அபோலோ புற்றுநோய் மருத்துவமனையின் புதிய சாதனை!

'From Left to right : Dr.Subathra, Dr.Rathnadevi, Dr. Shankarganesh, Dr. Chandrashekar, Dr.Balamurugan seen along with patient - Baby Ms.Konika from Assam.'

சென்னை 10 ஆகஸ்ட் 2017: அபோலோ புற்றுநோய் மருத்துவமனையின் நரம்பியல் அறுவைச்சிகிச்சை குழு, சென்னையில் முதல் முறையாக மூளையில் இருக்கும் கட்டியை முழுவதுமாக நீக்குவதற்காக, ஃப்ளுரெஸ்சென்ஸ் முறையின் வழிக்காட்டுதலின்படி அறுவைச்சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. இந்த நவீன தொழில்நுட்பம், நியூரோ-ஆன்காலஜிகல் சர்ஜரி துறையில் கட்டிகளை மிக அதிக துல்லியத்துடன் முழுவதுமாக, நீக்குவதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியின் உயிரை அச்சுறுத்திய 5X5 சென்டிமீட்டர் அளவில் (டென்னிஸ் பந்து அளவு) மூளையில் இருந்த கட்டி ஃப்ளுரெஸ்சென்ஸ் மூலமான அறுவைச்சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டதும், அடிக்கடி வந்து அச்சுறுத்திய வலிப்பு இல்லாமல் தற்போது ஆரோக்கியமாகவும், வலி இல்லாமலும் உற்சாகமாக இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாமைச் சேர்ந்த இந்த நான்கு வயது சிறுமி, முன்பெல்லாம் மூளைக்கட்டியின் பாதிப்பால் தினமும் குறைந்தப்பட்சம் நாலைந்து முறையாவது எதிர்பாராமல் கீழே விழுந்துவிடும் பாதிப்பில் இருந்தாள். அச்சிறுமியைச் சோதித்த போது, அதிக பாதிப்பை உண்டாக்கும் ‘எக்ஸ்ட்ராவெண்ட்ரிகுலர் எபெண்டிமொமா’(EXTRAVENTRICULAR EPENDYMOMA) என்னும் மிகவும் அரிதாக வரும் மூளைக்கட்டி அவளுக்கு இருப்பதைக் கண்டுப்பிடித்தனர். இந்த எக்ஸ்ட்ராவெண்ட்ரிகுலர் எபெண்டிமொமா’-யானது நடப்பதில் குறைப்பாட்டை உருவாக்குவதோடு, உடலை சமநிலையில் ஒருங்கிணப்பதையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அதோடு மீண்டும் மீண்டும் வலிப்பு உண்டாக்கும் அபாயத்தை உடையது.

அபோலோ புற்றுநோய் மருத்துவமனையின் நியூரோ சர்ஜரி குழுவானது, அதிநவீன தொழில்நுட்பத்திலான ‘ப்ளுரெஸ்சென்ஸ் கைடட் சர்ஜரி’(Florescence Guided Surgery - FGS) மூலம் மேற்கொண்ட உயிர்காக்கும் அறுவைச்சிகிச்சையின் மூலம் அச்சிறுமியின் தொடர் வலிப்புக்கு காரணமான மூளைக்கட்டியை முழுமையாக அகற்றி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது

இந்த நவீன எஃப்ஜிஎஸ் தொழில்நுட்பத்தில், அறுவைச் சிகிச்சை செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, விசேஷமான மை உடலினுள் செலுத்தப்படும். இந்த மையானது உடல் முழுவதும் மெதுவாக பரவும். அதிகளவில் பரபரவென செயல்படும், மூளைக்கட்டி போன்றவை மற்ற உடல் பாகங்களைவிட அதிகளவில் இந்த விசேஷ மையை எடுத்துக்கொள்ளும். அதாவது நம் உடலின் இருக்கும் சாதாரண செல்களைவிட இவை அதிகளவில் மையை எடுத்துகொள்ளும். இந்நிலையில் ’மஞ்சள் நிற 560 ஃபில்டரின்’ (மைக்ரோஸ்கோப்பின் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு விசேஷ ஃபில்டர்) கீழ் வைத்து பார்க்கும் போது மூளையில் இருக்கும் கட்டிகள் இதர செல்களை விட தனித்து, வித்தியாசமாக தெரியும். அதாவது இவற்றை சாதாரண செல்களுடன் ஒப்பிடும்போது அதிகம் ஒளிரும். இது அறுவைச்சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு, உடலின் ஆரோக்கியமான பகுதிகளில் இருக்கும் கட்டிகளிலிருந்து வித்தியாசப்படுத்தி காட்டும். இதனால் மூளைக்கு உண்டாகும் சேதத்தைக் குறைப்பதோடு, அறுவைச்சிகிச்சைக்கு பின்னால் உண்டாகும் சிக்கல்களை தவிர்க்கவும் பெரும் உதவி புரிகிறது.

அபோலோ கேன்சர் இன்ஸ்டிடியூட்-ஐ சேர்ந்த நியூரோ சர்ஜன் டாக்டர். பாலமுருகன் இந்த திருப்புமுனை அறுவைச்சிகிச்சை குறித்து கூறுகையில், ‘’மருத்துவ உலகில் புதிய திருப்புமுனையை உண்டாக்கியிருக்கும், ‘ஃப்ளுரெஸ்சென்ஸ் கைடட் சர்ஜரி’ எனப்படும் ’எஃப்ஜிஎஸ்’, மையமாக அமைந்திருக்கும் பெரிய கட்டிகள் உள்ள இளம் நோயாளிகளிடம் மிகவும் துல்லியமான நடைமுறைகளை பின்பற்றி அறுவைச்சிகிச்சை செய்வதற்கான ஒரு அருமையான தளத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய சிறப்பம்சம், உடல் ஆரோக்கியமான பகுதிகளையும், உடலில் பாதிப்பை உண்டாக்கும் வாய்ப்புள்ள கட்டிகளையும் தனித்து அடையாளம் காண பெரிதும் உதவும். அதன்மூலம் பாதிப்பை உண்டாக்கும் கட்டிகளை முழுமையாக நீக்கவிட முடியும்’’ என்றார்.

இந்த குழந்தையின் ‘ஹிஸ்டோபதாலஜி’யானது, ‘எக்ஸ்ட்ராவெண்ட்ரிகுலர் எபெண்டிமொமா’ என அடையாளம் காட்டியது. இது மிகவும் அரிதாக உண்டாகும் கட்டியாகும். இதுவரையில் மருத்தவ உலகில் 7 பேர் மட்டுமே இக்கட்டியினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இக்கட்டியினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலமானது, கட்டி நீக்கப்படும் எண்ணிக்கைக்கும், அறுவைச்சிகிச்சைக்குப் பிறகான ரேடியோதெரபி ஆகிய இரண்டையும் நேரடியாக பொறுத்து அமையும்.

இந்த சிறுமியின் விஷயத்தில், வயது காரணமாக ரேடியேஷன் தெரபிக்கும் கடும் சவாலாக இருந்தது. ஆனால் தேவையான மயக்க மருந்து மூலம், 30 நாட்கள் இச்சிறுமிக்கு ரேடியேஷன் சிகிச்சையை வெற்றிகரமாக அளித்தோம். தற்போது இச்சிறுமி எந்த வலியும் இல்லாமல், வலிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்.

‘ஃப்ளுரெஸ்சென்ஸ் கைடட் அறுவைச்சிகிச்சையில் முழு வெற்றிக்கு காரணம், அதை தொடர்ந்து மேற்கொண்ட ரேடியேஷன் தெரபியை அளித்த முழுமையான சிறந்த மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய குழுவினரின் அக்கறையே.