சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2006-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சொராபுதீன் ஷேக், அவரது மனைவி சவுசர்பி ஆகியோர் போலீஸ்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் என்று கூறி அவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் சொராபுதீன் ஷேக்கின் உதவியாளர் துளசி பிரஜாபதியும் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து இந்த என்கவுண்டர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சுமார் 500 பேர் சாட்சிகளாக பட்டியலிடப்பட்டனர். ஆனால் 210 பேர் மட்டுமே சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் அமித்ஷா மற்றும் ராஜஸ்தான் உள்துறை மந்திரியாக இருந்த குலாப்சந்த் கட்டாரியா பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அமித்ஷா, கட்டாரியா உள்பட 16 பேரை இந்த வழக்கில் இருந்து சி.பி.ஐ. கோர்ட்டு விடுவித்தது.

மீதமுள்ள 22 பேர் மீதும் விசாரணை நடந்தது. சமீபத்தில் வக்கீல்கள் வாதம் முடிந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியது அதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.