பெண்ணை அறைந்த போலீசை கண்டித்து போராட்டம்

பெண்ணை அறைந்த போலீசை கண்டித்து போராட்டம்
Police man slapped a women shutdown protest in tirupur

சூலூர்: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அய்யன் கோவில் ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி நேற்று அப்பகுதியை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் வந்து கடையை மூட உத்தரவாதம் அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை யொட்டி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் கோ‌ஷமிட்டனர், உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கண் மூடித்தனமாக தாக்கினார். இதில் அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி (வயது 45) என்ற பெண்ணின் கன்னத்தில் பாண்டியராஜன் ஓங்கி அறைந்தார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

மேலும் அங்கு குவிந்திருந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 30 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கி கன்னத்தில் அறைந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சாமளாபுரம், இச்சிக்கட்டி, காரணம் பேட்டை, சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

மேலும் சாமளாபுரம் பகுதியில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Police man slapped a women shutdown protest in tirupur