மாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்மஸ்ரீ: ஜனாதிபதி வழங்கினார்

மாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்மஸ்ரீ: ஜனாதிபதி வழங்கினார்
Mariappan thangavelu and winners receives padma awards

புது டெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டன.

7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 7 பேருக்கு பத்மபூ‌ஷன் விருதும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 30-ந்தேதி வழங்கினார். இந்நிலையில் 2-வது கட்டமாக பத்ம விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது.

பாடகர் ஜேசுதாசுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு ஆன்மிகத்துக்காக பத்ம விபூஷண் விருதும், மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமிக்கு கல்வி, இலக்கியம், இதழியல் பிரிவில் பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. சோ சார்பில் அவரது மனைவி இந்த விருதை பெற்றுக் கொண்டார். கலை மற்றும் இசைக்காக டி.கே.மூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இலக்கியம் மற்றும் கல்விக்காக மைக்கேல் டனினோவுக்கும், சமூக சேவைக்காக நிவேதிதா ரகுநாத் பீடேவுக்கும் குடியரசு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அதேபோல ஒலிம்பிக் சாதனையாளர் சாக்‌ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கவுடா, ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோர் விளையாட்டுப் பிரிவில் பத்மஸ்ரீ விருதை பெற்றனர். மேலும் விளையாட்டு பிரிவில் மாரியப்பன் தங்கவேலுவுக்கும், மருத்துவம் பிரிவில் சுனிதி சாலமனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Mariappan thangavelu and winners receives padma awards