தேர்தல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: ஜெ.தீபா

தேர்தல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: ஜெ.தீபா
I will take legal action against Election Commissioner says Deepa Jayakumar

சென்னை: எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தேன்.

முறையாகவும், சரியாகவும் வேட்புமனுவை பூர்த்திசெய்து, வேட்புமனுவுடன் இணைக்க வேண்டிய அனைத்து ஆவணங்களையும் இணைத்து தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தேன். தேர்தல் அதிகாரியிடம் நான் கொடுத்த ஆவணங்களில் இருந்து எண் 26 ஆவணத்தை அகற்றியுள்ளனர். இதையே வேட்புமனுவை நிராகரிப்பதற்கான காரணமாக தேர்தல் ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர் நான் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டும். தவறினால் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்பேன். எந்த ஒரு அரசியல் கட்சியின் நிர்ப்பந்தங்களுக்கும் பணியாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் அதிகாரி மாநில ஆளுங்கட்சியில் உள்ள சில முக்கிய நபர்களின் அழுத்தம் காரணமாக என்னுடைய வேட்புமனுவை திட்டமிட்டு தள்ளுபடி செய்துள்ளனர்.

இந்திய அரசியலில் தேர்தல் ஆணையம் செய்துள்ள ஜனநாயகப் படுகொலை. சட்ட தர்மங்களுக்கு விரோதமான தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கண்டித்து நாம் அனைவரும் போராட வேண்டும். வேட்புமனுவுடன் இணைத்துக்கொடுத்த ஆவணங்களை எடுத்தது யார் என்பது புரியவில்லை.

நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையர் கட்சிப் பிரமுகர்களின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நான் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என நினைக்கும் அரசியல் எதிரிகளுடைய அடி ஆட்கள் என்னுடன் தேர்தல் அலுவலகம் வந்த தொண்டர்களை கடுமையாக தாக்கியுள்ளார்கள். கலவரத் தாக்குதலை நடத்திய அடியாட்களை தடுத்து நிறுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆளுங்கட்சியின் ஏவலர்களாக காவல்துறை செயல்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்கலாம், எதிர்காலத்தில் நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஆளுங்கட்சியின் அக்கிரமங்களை எதிர்த்து போராட நாம் தயாராக இருக்க வேண்டும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் வெல்லும் என்பதை ஜெயலலிதா தமக்கேற்பட்ட சோதனைகளின் போது நமக்கெல்லாம் சொல்வார்கள். ஜெயலலிதா கூறிய பொன்மொழிகளை நினைவிலே கொண்டு எதிரிகளால் நமக்கு ஏற்பட்டிருக்கும் தற்போதைய சோதனைகளைக் கண்டு சோர்வடையாமல் நிமிர்ந்து நிற்போம். ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்றிட தொடர்ந்து செல்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

I will take legal action against Election Commissioner says Deepa Jayakumar