உரையாடல் வீடியோவை வெளியிடுவேன்: திவாகரனின் மகன்

உரையாடல் வீடியோவை வெளியிடுவேன்: திவாகரனின் மகன்
Divakaran son threat over sasikala jayalalithaa speech

சென்னை: அ.தி.மு.கவின் பொதுசெயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கொலை பழி சுமத்தியும் அம்மா சிகிச்சை படத்தை வெளியிடவில்லை. காரணம், பச்சை கவுன் உடையில், அம்மாவை எதிரிகள் பார்க்கக்கூடாது என்பதே ஒரே காரணம். இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல். சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம். ஆனால், ஓ.பி.எஸ்., கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மாவை பிணப்பெட்டியில் வைத்து ஓட்டு கேட்கிறார்.

உண்மை வலிமையானது. ஒரு நாள் புரட்சித்தலைவி அம்மாவும், தியாக தலைவி சின்னம்மா(சசிகலா) இருவரும் ஆஸ்பத்திரியில் நடத்திய உரையாடல் வீடியோ வெளிவந்தால்...? பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்...? அந்த நாள் மிக விரைவில்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோவை ஜெயானந்த் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Divakaran son threat over sasikala jayalalithaa speech