அடுத்த மாதம் 25-ந் தேதி போராட்டத்தை தொடருவோம்!

அடுத்த மாதம் 25-ந் தேதி போராட்டத்தை தொடருவோம்!
We will continue protest if our requests were not satisfied

சென்னை: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில், கடந்த மாதம் 14-ம் தேதி முதல் போராட்டம் நடத்திவந்தனர்.

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவேரி வேளாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கோரிக்கைகளை ஏற்று விவசாயிகள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு சென்னை திரும்பினர்.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் இரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அய்யா கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னிடம் ஆடி கார் இருக்கிறது. நான் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்றெல்லாம் வதந்தியை பரப்புகிறார்கள். எனக்கு 20 ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே உள்ளது.

தற்கொலை செய்து மடியும் விவசாயிகளை காப்பதற்காக டெல்லியில் போராட்டத்தை நடத்தினோம். எங்கள் போராட்டத்தை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை. நிர்வாணமாக ஓடியும் பார்த்தோம். அப்படியும் கண்டு கொள்ளவில்லை.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் போன்ற பெரிய தலைவர்கள் எங்களுடன் சந்தித்து பேசி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர், அவ்வளவு பெரிய தலைவர்கள் கேட்டு கொண்ட பிறகும் போராட்டத்தை கைவிடாமல் இருந்தால் நல்லதல்ல என்பதற்காகத் தான் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கி இருக்கும் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இதை மத்திய அரசும், மாநில அரசும் தட்டி கழிக்க முடியாது.

எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் அடுத்த மாதம் 25-ந் தேதி டெல்லி சென்று போராட்டத்தை தொடருவோம்.

We will continue protest if our requests were not satisfied