நாளை, நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் - தமிழக அரசு எச்சரிக்கை

நாளை, நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் - தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் நாளை (8-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (9-ந் தேதி) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த போராட்டத்தில், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறைகளில் பணியாற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல்வேறு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இதேபோல், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். 

இந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசின் பல்வேறு தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 8-ந் தேதி(நாளை), 9-ந் தேதி(நாளை மறுநாள்) ஆகிய இருதினங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளன. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத சில சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தமிழக அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.

எனவே, அனைத்து துறை தலைமை நிர்வாகிகளும், மாவட்ட கலெக்டர்களும் தங்களுக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்களுக்கு இதுகுறித்து தெரிவித்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்த வேண்டும்.

8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அலுவலகத்துக்கு வராதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது. 

உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக அனைத்து துறை தலைமை நிர்வாகிகளும் இருதினங்களும் பணிக்கு வராதவர்கள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.