நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை

நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை
SC jails justice CS Karnan for 6 months

கொல்கத்தா: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகாரை கூறியதை அடுத்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவர் மீது உச்சநீதிமன்றம் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் வராததால் அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கடந்த 4–ந் தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று, தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும், தன்னை நீதிபதி பணியாற்ற தடை விதித்த நீதிபதி பானுமதிக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். தன் வீட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக கோர்ட்டில் இந்த உத்தரவை பிறப்பித்தார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றங்களை அவர்கள் செய்துள்ளதால், இந்த தண்டனை பிறப்பிக்கப்படுவதாக அவர் கூறினார்.

மேலும், ஒரு வாரத்துக்குள் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதம் செலுத்தாவிட்டால், கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கர்ணன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பை தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SC jails justice CS Karnan for 6 months