மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடி யடி: கமல் கண்டனம்

மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடி யடி: கமல் கண்டனம்

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது 74 சதவீத வருகை பதிவுக்கு குறைவாக இருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராத கட்டண தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ஏழை மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக மாணவ பிரதிநிதிகள், கல்லூரியின் துணை வேந்தர் மற்றும் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை ஏற்பட்டது, ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த காரணத்தினால் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதை தடுக்க மாணவ - மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பல்கலைகழக வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இந்நிலையில், மாணவர்கள் மீதான தடி, அடிக்கு நடிகர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் கூறுவதாவது : "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது". என்று தெரிவித்துள்ளார்.