காவிரி விவகாரம் - அ.தி.மு.க. எம்.பி. ராஜினாமா

காவிரி விவகாரம் - அ.தி.மு.க. எம்.பி. ராஜினாமா
Cauvery issue ADMK MP Muthukaruppan resigns

புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய போவதாக அ.தி.மு.க. மேல்-சபை உறுப்பினர் முத்துக்கருப்பன் தெரிவித்து இருந்தார்.

அதன்படி முத்துக்கருப்பன் எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை மேல்-சபை தலைவர் வெங்கையாநாயுடுவிடம் கொடுத்தார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அம்மாவின் தொடர் சட்ட போராட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாமல் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசு காலம் தாழ்த்துவது எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். எனது சக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் காவிரி பிரச்சினைக்காக பாராளுமன்றம் உள்ளேயும், பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைவர் வேணுகோபால், துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று தொடர்ந்து போராடி வருகிறோம்.

மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் தொடர்ந்து மன வருத்தமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.

எனக்கு 2 வருடம் வரை பதவி காலம் இருந்தும் எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Cauvery issue ADMK MP Muthukaruppan resigns