ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்கு இலவச மருத்துவ முக

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்கு இலவச மருத்துவ முக
Free Surgical camp for Acid Attack Survivors

ஒவ்வொரு நாளும் புதிய புதிய நாயகர்களையும், நாயகிகளையும் கண்டுவருவதாக நடிகை கௌதமி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்தும், அவர்களுக்கு நம்பிக்கை சார்ந்த உளவியல் சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச சிகிச்சை முகாம் இன்று சென்னை சேத்துப்பட்டு பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இதில் நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன்(Dr.Simon Hercules), அதிஜீவன் அறகட்டளை நிறுவனர் ப்ராக்யா(Pragya prasun), பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணபதி கிருஷ்ணன்(Dr.Ganapathy Krishnan)), கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் திருமதி டாக்டர் நிர்மலா பொன்னம்பலம்(dr.Nirmala ponnambalam), டாக்டர் கார்த்திகேயன், பெண்ணலம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராதிகா சந்தானகிருஷ்ணன்(Dr.Radhika santhanakrishnan) இவர்களுடன் மருத்துவ சவால்களை எதிர்கொண்டு இளைய தலைமுறையினரின் மத்தியில் நம்பிக்கையை விதைத்து மன உறுதியுடன் வாழ்ந்து வரும் தன்னம்பிக்கையின் சிகரம் நடிகை கௌதமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ப்ராக்யா சிங் பேசுகையில்.‘இந்த சமூகத்தில் பல்வேறு நிலையிலான வன்முறைகளால் பெண்கள் ஆசிட் வீச்சிற்கு ஆளாகிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீள்வது பெரும் போராட்டமாக இருக்கிறது. பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைப்பதில்லை. நண்பர்களின் அரவணைப்பும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக இதற்குரிய மருத்துவ சிகிச்சை குறித்த முழுமையான விழிப்புணர்வு இவர்களை சென்றடைவதில்லை. இது என்னுடைய வாழ்வில் நடைபெற்றதால், இது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி, அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த அதிஜீவன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கினேன். நானே எதிர்பார்க்காத அளவிற்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் இதற்கு ஆதரவும் உதவியும் கிடைத்து வருகிறது. ஒரு நல்ல விசயத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் போது தான் அது சமுதாயத்தில் நல்ல பலனைத் தரும் என்பார்கள். அதனால் நியூ ஹோப் மருத்துவமனையுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு முகாமை நடத்துகிறோம்.’ என்றார்.

நடிகை கௌதமி பேசுகையில் ‘நான் ஒவ்வொரு நாளும் இந்த சமுதாயத்தில் போராடிக்கொண்டிருக்கும் புதிய புதிய நாயகர்களையும், நாயகிகளையும் பார்க்கிறேன். அவர்களின் தன்னம்பிக்கை என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கு ஆசிட் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்டிருக்கும் இளம் பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு புதிய தோற்றத்தில் வாழ்ந்து வருவதைப் பார்க்கும் போது அவர்களின் துணிச்சலை பாராட்டத் தோன்றுகிறது. இந்த சமுதாயம் அவர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்தாமல் இருந்தால் அவர்கள் கூடுதல் தைரியத்துடன் உழைத்து முன்னேறுவார்கள். பலருக்கு முன்னூதாரணமாக திகழ்வார்கள். தற்போதைய சூழலில் இந்த சமுதாயத்தை பாதுகாக்க ஏராளமான வீரர்கள் தேவை. இந்த உலகத்திற்கு தேவை. இவர்களைக் காணும் போது இவர்களுடன் இன்று இருப்பதை நான் பெருமிதமாக உணர்கிறேன். இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் டாக்டர் சைமன், டாக்டர் ராதிகா உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களையும் மனதாக வாழ்த்துகிறேன்.’ என்றார்.

டாக்டர் நிர்மலா பொன்னம்பலம் பேசுகையில்,‘ தீக்காயங்கள் மற்றும் அமிலத்தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தற்போது ஏராளமான புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள் அறிமுகமாகியிருக்கின்றன. பிளாஸ்டிக் சர்ஜரி மட்டும் இல்லாமல் காஸ்மெடீக் சர்ஜரியும் இத்தகையவர்களுக்கு அவசியமாகிறது. என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு ஏற்படும் தீக்காயங்கள், மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்பு, ஆசிட் பாதிப்பு போன்றவற்றை சற்று கூர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருந்தால் தடுக்க இயலும். ஆனாலும் பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் இந்த சமூகத்தை எதிர்கொள்ள அஞ்சி, தயங்கி வீட்டிலேயே முடங்கி கிடக்காமல், இது போன்ற விழிப்புணர்வு முகாம்களில் கலந்து கொண்டால் அவர்களுக்கு முதலில் மனதளவில் நம்பிக்கை பிறக்கும். பிறகு அவர்கள் ஆபரேசன் செய்து கொண்டு வாழ்வதற்கான வழியை கண்டறிவார்கள்.’ என்றார்.

வந்திருந்த அனைவருக்கும் நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டா சைமன் நன்றி தெரிவித்தார்.

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/cinema/Gauthami-14-07-18]

Free Surgical camp for Acid Attack Survivors