இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 5.8% ஆக உயரும் என உலக வங்கி அறிவிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 5.8% ஆக உயரும் என உலக வங்கி அறிவிப்பு

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக இருந்தாலும், ஆனால், வரவிருக்கும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8% ஆக உயரும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் 2019 - 20ம் நிதியாண்டில் நிதி சாராத நிறுவனங்களின் மந்த நிலையே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆகக் குறையக் காரணமாக அமைந்துவிட்டது.

ஆனால், இந்தியா சரிவில் இருந்து மீளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அது 2.5%க்கும் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு இருந்த மந்தநிலை, வரும் ஆண்டில் இருக்காது என்றும் உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்ததாவது, கடந்த 2018-19 நிதியாண்டில் 6.2 சதவீதமாகக் காணப்பட்ட தயாரிப்பு துறையின் வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, நடப்பு 2019-20 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக குறையும். இது, முந்தைய நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்தது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.