‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் விரைவில் அமல்!

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் விரைவில் அமல்!

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் மாநிலங்கள் அவையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

மத்திய அரசு ரேஷனில் உணவுப்பொருள் வழங்குவதற்காக சுமார் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடியை மானியமாக வழங்குகிறது. ஒரு கிலோ கோதுமை ரூ.2-க்கும், அரிசி கிலோ ரூ.3-க்கும் வழங்கப்பட்டு வருகிறது.

உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு அதிக செலவு இருந்தபோதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. மாநில அரசுடன் ஒருங்கிணைந்து வினியோகிக்கப்படுவதால் ரேஷன் பொருட்கள் முழுமையாக ஏழைகளை சென்றடைகிறது.

ரேஷன் கடைகளில் கோதுமை, அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்கள் ஏழை மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏழைகள் நாட்டின் எந்த மூலையிலும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்களை பெற முடியும். இதனால் ஒரு குடும்பத்தினர் பல ரேஷன் கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.