ருதுராஜ் – கான்வே பொறுப்பான ஆட்டம் சூப்பர் கிங்ஸ் ரன் குவிப்பு

ருதுராஜ் – கான்வே பொறுப்பான ஆட்டம் சூப்பர் கிங்ஸ் ரன் குவிப்பு
ருதுராஜ் – கான்வே பொறுப்பான ஆட்டம் சூப்பர் கிங்ஸ் ரன் குவிப்பு

ருதுராஜ் – கான்வே பொறுப்பான ஆட்டம் சூப்பர் கிங்ஸ் ரன் குவிப்பு

சென்னை: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான குவாலிபயர்-1 ஆட்டத்தில், ருதுராஜ் – கான்வே தொடக்க ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். சிஎஸ்கே தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், டெவன் கான்வே களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது.

36 பந்தில் அரை சதம் அடித்த ருதுராஜ் 60 ரன் (44 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மோகித் ஷர்மா பந்துவீச்சில் மில்லர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஷிவம் துபே 1 ரன் மட்டுமே எடுத்து நூர் அகமது சுழலில் கிளீன் போல்டானார். ரகானே 17 ரன் எடுத்து நல்கண்டே பந்துவீச்சில் கில் வசம் பிடிபட, கான்வே 40 ரன் எடுத்து (34 பந்து, 4 பவுண்டரி) ஷமி வேகத்தில் ரஷித் கான் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராயுடு 17 ரன் (9 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரஷித் சுழலில் ஷனகாவிடம் பிடிபட்டார். கேப்டன் தோனி 1 ரன்னில் வெளியேற, ஜடேஜா 22 ரன் (16 பந்து, 2 பவுண்டரி) எடுத்து கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. மொயீன் அலி 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

குஜராத் பந்துவீச்சில் ஷமி, மோகித் தலா 2, நல்கண்டே, ரஷித், நூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. சாஹா, ஷுப்மன் கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலையில், தோற்கும் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிபயர்-2 ஆட்டத்தில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விவரம்
சூப்பர் கிங்ஸ் பேட்டிங்
ருதுராஜ் கெயிக்வாட் (சி) மில்லர் (பி) மோகித் 60
டெவன் கான்வே (சி) ரஷித் (பி) ஷமி 40
ஷிவம் துபே (பி) நூர் அகமது 1
அஜிங்க்யா ரகானே (சி) கில் (பி) நல்கண்டே 17
அம்பாதி ராயுடு (சி) ஷனகா (பி) ரஷித் 17
ரவீந்திர ஜடேஜா (பி) ஷமி 22
எம்.எஸ்.தோனி (சி) ஹர்திக் (பி) மோகித் 1
மொயீன் அலி (ஆட்டமிழக்கவில்லை) 9
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவர், 7 விக்கெட்) 172
விக்கெட் வீழ்ச்சி: 1-87, 2-90, 3-121, 4-125, 5-148, 6-155, 7-172.
குஜராத் பந்துவீச்சு: ஷமி 4-0-28-2, நல்கண்டே 4-0-44-1, ரஷித் 4-0-37-1, நூர் அகமது 4-0-29-1, மோகித் ஷர்மா 4-0-31-2.