காதலர் மீது ஆசிட் வீசிய பெண்

காதலர் மீது ஆசிட் வீசிய பெண்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் விகாஸ்புரி பகுதியில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி, போலீசாருக்கு புகார் ஒன்று வந்தது. அந்தப் புகாரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ஆண் மற்றும் பெண் மீது ஆசிட் வீசப்பட்டதாக கூறப்பட்டது. காதலர்களான இருவர் மீது ஆசிட் வீசியது யாராக இருக்கும் என்று போலீசார் குழம்பிப்போயினர்.

ஆசிட் வீச்சில் முகத்தில் படுகாயம் அடைந்த காதலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னால் அமர்ந்து இருந்த பெண்ணுக்கு கையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ஆண் அளித்த தகவல் போலீசாருக்கு முக்கிய துப்பாக அமைந்தது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான், பின்னால் அமர்ந்து பயணித்த காதலியான அந்தப்பெண், ஹெல்மெட்டை கழற்றுமாறு கூறியுள்ளார். ஹெல்மெட்டை கழற்றிய சில நிமிடங்களில் ஆசிட் வீசப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், பின்னால் அமர்ந்து வந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆசிட் வீசியது நான் தான் என்று அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார். சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாகவும், ஆனால்,  தன்னை திருமணம் செய்து கொள்ள காதலர் மறுத்ததையடுத்து, ஆத்திரத்தில் ஆசிட் வீசியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.  இதையடுத்து, அந்தப்பெண்ணைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.