மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர் திரு. கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இன்று (26-06-2021) நடந்த இணையவழி கலந்துரையாடலில் தலைவர் திரு. கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசியதாவது,
கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன்.
அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்ற இருக்கிறேன்.
புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக்குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில அறிவிப்புகள் இனி வரும் நாட்களில் வெளியாகும்.
புதிய மாநிலச் செயலாளர்கள் ஏற்கனவே நமது கட்சியின் வேட்பாளர்களாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டவர்கள்தான். எனினும் அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.
திரு. சிவ. இளங்கோ சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்.
திரு. செந்தில் ஆறுமுகம் தகவல்தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர். ’நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி’ மலரவேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்துவருபவர். சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தகவல் அறியும் உரிமை சட்டத்தினை முழுமையாகப் பயன்படுத்துவது என மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.
திரு. சரத்பாபு தன் கடின உழைப்பாலும், திறமையாலும் வெற்றிகரமான தொழில்முனைவராகத் திகழ்பவர். ஃபுட்கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.
புதிய நியமனங்கள்:
1. திரு. பழ. கருப்பையா – அரசியல் ஆலோசகர்
2. திரு. பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
3. திரு. ஏ.ஜி. மெளரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
4. திரு. தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
5. திரு. செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
6. திரு. சிவ. இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
7. திரு. சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்
8. திருமதி ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்
9. திரு. ஜி. நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்
மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தலைமைப்பண்பு மிக்க இவர்களை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். முழு ஒத்துழைப்பை நல்குங்கள். இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்து கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்றார்.
நன்றி.
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.