குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் சட்டக்கல்லூரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

இதேபோல் தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர். அப்போது மாணவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் சட்டக்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பேரணியாக சென்றனர். டெல்லியில் மாணவர்களை தாக்கியதை கண்டித்து காமராஜர் சிலை பகுதியில் இருந்து பேரணியாக சென்ற மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.