வேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம்: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜாசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 2 அணைகளில் இருந்தும் 25 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து காவிரி வழியாக ஒகேனக்கலுக்கு வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 ஆயிரத்து 347 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் பல மடங்கு அதிகரித்து 34 ஆயிரத்து 722 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்த மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.