மகாராஷ்டிரா விவகாரம்- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு...!

மகாராஷ்டிரா விவகாரம்- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு...!

மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

நாடாளுமன்ற மக்களவை இன்று கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்ட்ராவில் நிகழ்த்தப்பட்டுள்ள ஜனநாயகப் படுகொலை குறித்து இந்த அவையில் கேள்வி எழுப்ப விரும்புவதாகவும், ஆனால், அவ்வாறு கேள்வி எழுப்புவதால் எந்த பயனும் இல்லை என்பதை தான் உணர்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன. மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டபடி இருந்தனர்.

அவர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா முயன்றார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து, அவையை சபாநாயகர் ஓம் பிர்லா நண்பகலுக்கு ஒத்திவைத்தார். பின்னர் மக்களவை மீண்டும் கூடியபோது அமளி நீடித்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.இதேபோல், மகாராஷ்டிரா விவகாரம் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. மத்திய அரசைக் கண்டித்தும், பாஜகவை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.