'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்திய திரையுலகம் சார்பாக விழா எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நிகழ்ச்சி 2019 பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம். ஆகையால், அதற்கான வேலைகள் நிறைய உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடின உழைப்பு தேவைப்படுகிறது. அதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் 'பெப்சி' சார்பாக ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள். இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.
இந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் வரும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
அதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசை சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். அதற்கான 'MO' -வில் கையெழுத்திடவிருக்கிறோம். விரைவில் அதுசார்ந்த செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.
மற்ற இசையமைப்பாளர்களும் வரவிருக்கிறார்கள். அதேபோல், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம். அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம். ரஜினி, கமல் இருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறோம். பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம். யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்பதை பற்றி விபரம் ஜனவரி 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.
இந்நிகழ்ச்சி பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதே நேரம் தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி 'bookmyshow' - வுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். ரூ.500 லிருந்து ரூ.25000 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸ்-ம் இருக்கிறது. இவ்வாறு தலைவர் விஷால் கூறினார்.