’கும்கி 2’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’கும்கி 2’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
மலை கிராமத்தில் வாழும் நாயகன் மதி, சிறு வயதில் வழி தவறி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றுகிறார். அதில் இருந்து அந்த குட்டி யானை மதியை சுற்றி சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமையாகி அதை வளர்க்கிறார். யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை மாயமாகி விடுகிறது. யானையை தேடி அலையும் மதி ஒரு கட்டத்தில் அதன் நினைவில் தன்நிலை மறந்தவராக வலம் வருகிறார்.
இதற்கிடையே ஆசிரியரின் அறிவுரையால் கல்லூரி படிப்புக்காக தன் ஊரை விட்டு செல்லும் மதி, 5 வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அப்போது மாயமான யானை பற்றிய தகவல் ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அந்த தகவலை வைத்து யானையை தேடி செல்லும் மதிக்கு அவரது யானை கிடைத்ததா ?, யானை மாயமானதன் பின்னணி என்ன ? என்பது தான் ‘கும்கி 2’.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மதி, தோற்றத்தில் ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். யானையை இழந்துவிட்டு தவிப்பது, யானையை ஆபத்தில் இருந்து காப்பாற்ற துடிப்பது, தன்னிடம் இருந்து யானையை பிரிக்க நினைப்பவர்கள் மீது கோபம் கொள்வது என்று பல்வேறு உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.
நாயகியாக அல்லாமல் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் ஷ்ரிதா ராவ், நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் மெலொடி ரகம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா, மலைகளையும், அருவிகளையும் பார்வையாளர்கள் வியக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது. அதே சமயம், வனப்பகுதி காட்சிகளில் சில ஏமாற்று வேலைகள் செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
காட்சிகளை மிக நேர்த்தியாக தொகுத்து, இயக்குநர் பிரபு சாலமன் சொல்ல நினைத்ததை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் புவன்.
காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகளையும், யானையையும் மையமாக வைத்து இயக்குநர் பிரபு சாலமன் எத்தனை படங்கள் எடுத்தாலும், ஒவ்வொன்றிலும் ஒரு மேஜிக் நிகழ்த்துவார், அந்த மேஜிக் இந்த படத்திலும் இருக்கிறது.
யானைக்காக நாயகன் சண்டைப்போடாமல், நாயகனுக்காக யானை சண்டைப்போடுவது உள்ளிட்ட காட்சிகள் மூலம் சிறுவர்களையும் ரசிக்க வைக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரபு சாலமன், குட்டி யானை நாயகனுடன் நட்பாவது, யானை காட்சியை படமாக்கிய விதம் ஆகியவற்றால் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
மலைகள் மற்றும் அருவிகளை காட்டி ரசிகர்களை வியக்க வைப்பதோடு, அரசியல் பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் பிரபு சாலமன், தனது வழக்கமான பாணி படம் என்றாலும் அதை சற்று வித்தியாசமான முறையில் கையாண்டு ஒரு முழுமையான கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து இயற்கை மற்றும் வன விலங்குகளை மையமாக வைத்து படங்கள் இயக்கினாலும், அவற்றை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கொடுப்பதோடு, இயற்கையோடு ரசிகர்களை பயணிக்க வைக்கும் இயக்குநர் பிரபு சாலமன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.




