நான் அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய் – யோகிபாபு "தர்ம பிரபு"

நான் அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய் – யோகிபாபு "தர்ம பிரபு"

நான் அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய் – யோகிபாபு "தர்ம பிரபு"

யுகபாரதி பேசும்போது,

என் நண்பர் தயாரிப்பாளராகியிருப்பது மகிழ்ச்சி. நகைச்சுவைக்கு இவரைத் தவிர ஆள் இல்லை என்பதை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குனர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், என் நண்பன் முத்துகுமாருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

ரேகா பேசும்போது,

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. இயக்குநர் அம்மா கதாபாத்திரத்திரம் இருக்கிறது பணியாற்றுகிறீர்களா? என்று கேட்டார். யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன். இப்படத்தின் டிரெய்லரை பார்த்து என் கதாபாத்திரத்தைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். யோகிபாபுவிற்கு ஜோடியாக நிச்சயம் நடிப்பேன் என்றார்.

இயக்குநர் திருமலை பேசும்போது,

தர்மபிரபு படம் பற்றி திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கேட்கும் கேள்வி குழந்தைகளுக்கு ஏற்ற படமாக இருக்குமா என்பது தான். சமூகத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நகைச்சவையாக கொடுத்திருக்கிறார். அதற்காக யோகிபாபுவைத் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள். ஆங்காங்கே அரசியல் கலந்திருந்தாலும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை என்றார்.

எடிட்டர் சான் லோகேஷ் பேசும்போது,

முத்துக்குமரன் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கு விடாமுயற்சி எடுத்துக் கொண்டே இருப்பார். இந்த படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. டிரெய்லரில் பல விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறோம். படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கலாம். நிச்சயம் இப்படம் வெற்றிபெறும் என்றார்.

வேல்முருகன் பேசும்போது,

'கள்வனின் காதலி'யில் அறிமுகமானேன். அதிலிருந்து பி.ரங்கநாதன் எனக்கு நண்பர். அப்போதிருந்தே அவருடைய கடின உழைப்பைப் பற்றி நன்றாக தெரியும். அரசியல் வசனங்கள், பாடல்கள், டிரெய்லர் நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் என்றார்.

சக்தி சௌந்தரராஜன் பேசும்போது

என்னுடைய முதல் படத்திற்கு எக்ஸ்க்யூட்டிவ் தயாரிப்பாளராக இருந்தார். இப்படம் பிரம்மாண்டமாக வந்திருப்பதற்கு தயாரிப்பாளர் தான் காரணம் என்றார்.


நடன இயக்குநர் விஜி பேசும்போது,

யோகிபாபு இரவு பகலாக பணியாற்றி கடுமையாக உழைத்திருக்கிறார். அதேபோல், இயக்குநர் முத்துகுமாரும் கடின உழைப்பாளி. படப்பிடிப்பு தளத்திலும் கலகலப்பாகத்தான் இருப்பார்கள். சிறிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக செட் அமைத்திருக்கிறார் கலை இயக்குநர். பழைய பாணி இருக்கக்கூடாது என்பதற்காக கவனத்துடன் செட் அமைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது,

இப்படத்தில் இருப்பதில் மகிழ்ச்சி. எமலோகத்தில் வரும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பாடலை எம்.எஸ்.வி.-யின் மகன் தான் பாடினார். யோகிபாபுவின் நகைச்சுவை எனக்கு பிடிக்கும்.

இயக்குநர் முத்துகுமரன் பேசும்போது,

நானும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரே அறையில் தங்கியிருந்தோம். அப்போது நாங்கள் இருவரும் இந்த கதையைப் பற்றி பேசினோம். யாராவது தவறு செய்தால் தண்டனை கொடுப்பது எமதர்மன் தான். அதை மையமாக வைத்து நகைச்சுவையாக எடுத்திருக்கிறோம். ராதாரவி யோகிபாபுவிற்கு தந்தையாக நடித்திருப்பார். அவரைத் தவிர வேறு யாரும் இந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கமாட்டார்கள்.

தயாரிப்பாளரிடம் இக்கதையைக் கூறி, தயாரிப்பாளர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்றேன். கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் என்றார். கலை இயக்குநர் நான் நினைத்ததைவிட பிரம்மாண்டமாக செட் அமைத்துக் கொடுத்தார். அதுதான் படத்திற்கு முக்கியம். அதேபோல், ஆடை வடிவமைப்பு முருகன் சிறப்பாக செய்துக் கொடுத்தார். ‘கன்னிராசி’ படத்தை 45 நாட்களில் இயக்கி முடித்தேன். இசைக்கு ‘கன்னிராசி’ படத்திற்கே ஜஸ்டினை அழைக்க நினைத்தேன். ஆனால், சில காரணங்களால் அவரை அழைக்கமுடியவில்லை. இந்த படத்தில் ஜஸ்டின் இசையமைத்ததில் மகிழ்ச்சி. யோகிபாபுவை பற்றி நான் பேசிக் கொண்டே போகலாம். அவரை நடிகனாகும் முன்பிருந்தே தெரியும். ஒரு காலகட்டத்தில் அவரை சம்பாதித்து வரும் தொகையில் தான் நாங்கள் சாப்பிடுவோம். அவர் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

இயக்குநர் செல்வம் பேசும்போது,

நானும் பி.ரங்கநாதன் பல ஆண்டுகால நண்பர்களாக இருந்தாலும் இருவரும் சார் என்றுதான் அழைப்போம். முத்துகுமாரும், யோகிபாபுவும் எமலோகத்தில் இருந்து பூமியைப் பார்க்கிறார்கள். நம் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்களைக் கூறியிருக்கிறார்கள் என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

நான் பார்த்ததிலிருந்தே பி.ரங்கநாதன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். சினிமாவை அதிகம் நேசிக்கக் கூடியவர். ரஜினியைப் பற்றி இப்படத்தில் விமர்சனம் செய்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜஸ்டின் திறமையானவர். அவரை என் படங்களில் இசையமைக்க அழைப்பேன்.

இயக்குநர் மூர்த்தி

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி‘ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினேன். அப்படம் மாபெரும் வெற்றியடையும் என்று நினைத்தேன். அதேபோல் இப்படமும் வெற்றியடையும் என்ற தோன்றுகிறது. ஆன்லைனில் பதிவு செய்யப்படும் திரையரங்க டிக்கெட் விலை அதிகரித்திருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. அதை பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது

இயக்குநர் மூர்த்தி கேட்ட கேள்வி சரியானது தான். டிக்கெட் விலையில் மாற்றம் செய்ய அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கோரிக்கை விடுத்தாலே போதும். ஆனால், யாரை அழைத்துக் கொண்டு பேசுவது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் அனாதையாக நிற்கிறோம். இந்நிலைமைக்கு முறையான முயற்சி செய்யாமல் இருப்பதுதான் காரணம். தமிழ் ராக்கர்ஸ், டிக்கெட் விலை ஏற்றம் போன்ற பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம்.

‘தர்ம பிரபு’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பார்த்ததும் இப்படத்தை இழந்துவிட்டோம் என்று அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொறாமை ஏற்பட்டிருக்கும். யோகிபாபுவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இயக்குநர் முத்துகுமாரின் முகபாவனை நன்றாக இருக்கிறது. அவரும் நடிக்கலாம். இதுவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நகைச்சுவை நடிகர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏன் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பதை புரிந்துக் கொண்டு இனிமேல் வருபவர்கள் அந்த தவறை சரிசெய்துக் கொள்ள வேண்டும்.

தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் பேசும்போது

இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

யோகிபாபு பேசும்போது

இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி கூறி, இப்படத்தில் நடிப்பீர்களா? தேதி கிடைக்குமா? என்று முத்துக்குமார் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அதே சமயத்தில் ‘குர்கா’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன். யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாக செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

முதலில் மேக் அப் போட்டதும் யாருக்கும் திருப்தி ஏற்படவில்லை. ரேகா தான் கூறினார், இந்த கெட் அப் போட்டாலே திமிர் தானாக வந்துவிடும். அதேபோல் தான் நானும் உணர்ந்தேன். சில இடங்களில் நான் பேசும் வசனங்களைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் பயந்திருக்கிறார்கள். என் வாழ்க்கையில் காலம் கடந்து இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை‘, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் இப்படமும் அமையும். விரைவில் நானும், ரேகாவும் இணைந்து நடிப்போம்.

நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள் என்றார்.