சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மைலாஞ்சி' படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு
சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மைலாஞ்சி' படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் 'மைலாஞ்சி' திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் 'மைலாஞ்சி' திரைப்படத்தில் 'கன்னி மாடம்' பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். உன்னதமான காதல் உணர்வை போற்றும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் ப. அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.
திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டீசரை வெளியிடுவதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் திருமதி அகிலா பாலு மகேந்திரா, கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மிஷ்கின், மீரா கதிரவன், தயாரிப்பாளர் தனஞ்செயன், காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் 'மைலாஞ்சி' பாடல்களை வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ப. அர்ஜுன் பேசுகையில், "இது நெகிழ்ச்சியான மேடை. உலகம் பெரியது, ஆனால் என்னுடைய உலகம் மிக சிறியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் மனநல மருத்துவராக பணியாற்றி வருகிறேன். அன்னை இல்லம் என்ற ஒரு கூட்டு இல்லம் தான் என்னுடைய உலகம். எனக்கு வெளி உலகம் தெரியாது. நோய்களைப் பற்றி, அதுவும் மனநலம் சார்ந்த நோய்களைப் பற்றியும் நோயாளிகள் குறித்தும் கண்டறிந்த நான் இந்த வெளி உலகத்தை பார்க்கவில்லை.
சினிமா தயாரிக்க போகிறேன் என்று சொன்னவுடன் என்னுடைய உறவுகளும் நண்பர்களும் பதட்டம் அடைந்தனர். வியப்பாகவும் பார்த்தனர், சிலர் வருத்தமும் அடைந்தனர். ஆனால் 'மைலாஞ்சி' திரைப்படம் எனக்கு ஏராளமான அனுபவங்களை கற்றுத் தந்திருக்கிறது. அனுபவ பாடங்களில் நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், தீயவற்றை விட்டு விடுங்கள். அடுத்த நாள் காலையில் நாம் இருப்போமா என்று உறுதியாக தெரியாது. மனித வாழ்க்கை நிலைத்தன்மை அற்றது.
கதை சொல்வதற்காக என்னுடைய ஹீரோ, இயக்குநர் அஜயன் பாலாவை எனக்கு அறிமுகப்படுத்துகிறார். நான்கு கதைகளை அவர் சொல்கிறார், அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எந்த கதைக்கும் எதிர்வினை ஆற்றாததால் ஹீரோவும், இயக்குநரும் என்னை பார்த்துக் கொண்டே இருந்தனர். நான் அடிப்படையில் மனநல மருத்துவன் என்பதால் எதிர்வினை ஆற்றாமல் இருப்பது என்னுடைய பழக்கமாகிவிட்டது. அதன் பிறகு அவர்களிடம் வேறு ஏதேனும் கதை இருக்கிறதா எனக் கேட்டேன்.
இயக்குநர்களில் பீம்சிங், ஸ்ரீதர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா உள்ளிட்டவர்களை எனக்கு பிடிக்கும். இவர்கள் மனித உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகம் என்பதை கடந்து அதற்குள் மனித உணர்வுகளை கடத்தக்கூடிய அளவிற்கு கதையை சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டேன்.
அதன் பிறகு ஐந்தே நிமிடத்தில் ஒரு கதையை சொன்னார். அந்த கதை தான் 'மைலாஞ்சி'. உணர்வுகள் எதுவும் புதிதில்லை, எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் ஒன்றுதான். இந்த பூமி அழியும் வரை காதல் ஒரு உன்னதமான நெகிழ்வான ஒரு உணர்வு. காதல் எனும் உணர்வு பழையதாக இருந்தாலும், அதை கொடுக்கும் விதம் புதிதாக இருக்க வேண்டும்.
இந்தத் திரைப்படம் எனக்கு நட்பை கற்றுக் கொடுத்திருக்கிறது. நட்பிற்குரிய மரியாதையும், மதிப்பும் குறைந்து கொண்டிருக்கிறது என்று நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். அது இல்லை என்பதை இந்த படத்தில் நான் கற்றுக் கொண்டேன். நட்பின் காரணமாக ஒளிப்பதிவாளர் செழியன் இந்த குழுவுடன் இணைந்தார்.
காதல் என்ற உணர்வை மென்மையாக சொல்லக்கூடிய இந்த கதைக்கு இசைஞானி இளையராஜா தான் வேண்டும் என கேட்டேன். செழியனின் நட்பிற்காக இளையராஜா இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். செழியனின் நட்பிற்காக படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இந்த குழுவுடன் இணைந்தார். வெற்றிமாறன் இந்தப் படத்தை வழங்குவதற்கும் நட்புதான் காரணம். மிஷ்கின் அவர்களும் நட்பின் காரணமாகவே இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கிறார். அண்ணன் சீமானுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பின் காரணமாகவே அவரும் இங்கு வருகை தந்திருக்கிறார். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டாத என்னுடைய பால்ய கால வகுப்புத் தோழர் ஏடிஜிபி தினகரனையும் மற்றும் நட்பின் காரணமாக இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காதல் தற்போது வேறு விதமாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில், காதல் வேறுவிதமானதல்ல, காதல் என்றைக்கும் காதல் தான், உண்மையான காதல் என்பது எப்போதும் காதலாகவே இருக்க வேண்டும் என்பதை சொல்வதற்காகவே மைலாஞ்சியை உருவாக்கி இருக்கிறோம். இதனை இந்த இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்," என்றார்.
ஒளிப்பதிவாளர் செழியன் பேசுகையில், "அஜயன் பாலா எனக்கு நண்பன். 2000ம் ஆண்டில் நான் பி. சி. ஸ்ரீராமின் உதவியாளராக பணியாற்றியபோது, அஜயன் பாலா மற்றொரு இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றிய போது நண்பர்களாக அறிமுகமானோம். அப்போது நடைபெற்ற உரையாடலில், 'நான் முதலில் படத்தை இயக்கினால் அதற்கு நீதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்' என என்னிடம் கேட்டுக் கொண்டார். கேட்டுக் கொண்டதுடன் மட்டும் இல்லாமல் அவருடைய பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, ' இதுதான் உனக்கான அட்வான்ஸ்' என்றார். அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு நாள் திடீரென்று அலுவலகத்திற்கு வந்து படத்தில் பணியாற்ற சம்மதமா எனக் கேட்டார். அப்போது அவரிடம், 'நீ கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கிறது. வா படப்பிடிப்புக்கு செல்லலாம்' என்றேன்.
ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும்போது யாரேனும் இருவர் எனக்கு நெருக்கமான நண்பர்களாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் இந்த படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீராம் கார்த்திக் எனக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். இந்த படத்திற்காக தன்னுடைய முழு உழைப்பையும் வழங்கி இருக்கிறார். தமிழில் முக்கியமான நடிகராக அவர் வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் அர்ஜுன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி, அவரும் நெருக்கமான நண்பராக மாறிவிட்டார்.
ஊட்டி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது பாலுமகேந்திரா தான். அவர் காட்சிப்படுத்தாத லொகேஷன்களை தேடித் தேடி இந்த படத்திற்காக பதிவு செய்திருக்கிறோம். இருபது ஆண்டுகள் கழித்து கலர்ஃபுல்லாக க்ளாஸியாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பை அளித்த நண்பர் அஜயன் பாலாவிற்கு நன்றி. நான் பெரிதும் மதிக்கும் பாலு மகேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த படத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்," என்றார்.
நடிகர் சிங்கம் புலி பேசுகையில், "இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மருத்துவர் அர்ஜுன் எனக்கு மாமா. எனக்கு சொந்த ஊர் சேத்தூர். நாங்கள் கால சூழலில் இடம் மாறி விட்டோம். ஆனால் அதே ஊரில் தான் இருப்பேன் என்று சொல்லி இன்றும் அங்கேயே இருக்கிறார் அர்ஜுன். அவருடைய அப்பா ஒரு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர். இவர் படித்து மருத்துவராகி இருக்கிறார்.
இப்போதும் அவர் காசு வாங்காமல் ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். அப்பா, அம்மா, பாரதியார், வள்ளுவர், கம்பர்... இதுதான் அவருடைய உலகம். அவர் எந்த ஹோட்டலிலும் சாப்பிட மாட்டார். வெளியிடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். குளிர்சாதன வசதி உள்ள அறையில் அதிக நேரம் இருக்க மாட்டார். தனி மனித ஒழுக்கத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய குலதெய்வத்தை வணங்குவதற்காக செல்லும்போது இவரை சந்திக்கிறேன். அப்போது என்னிடம் ஒரு படத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டுவிட்டு, ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என அவருடைய விருப்பத்தை சொன்னார். அவர் சில கதைகளையும் சொன்னார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அஜயன் பாலா அவரை சந்தித்து கதை சொன்ன போது, அந்த கதை பிடித்து, இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அஜயன் பாலா, செழியன், லால்குடி இளையராஜா, ஸ்ரீகர் பிரசாத், இசைஞானி ஆகியோர் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றால் தயாரிப்பாளர் சினிமாவை எவ்வளவு தூரம் நேசித்திருக்கிறார் என்பது புரியும். சினிமாவைப் பற்றி என்னிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசுவார்," என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், "இயக்குநர் அஜயன் பாலா பேரன்பு மிக்கவர். என்னுடைய சினிமா ஆய்வை, அறிவை உரசி பார்க்கக்கூடியவர். எப்போதும் சினிமாவைப் பற்றி ஆரோக்கியமான விவாதத்தை முன் வைப்பவர். நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. சினிமாவில் தேவையில்லாமல் ரொம்ப நல்லவர்கள் சில பேர் இருப்பார்கள். அதில் மீரா கதிரவனை போல் அஜயன் பாலாவும் ஒருவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், அஜயன் பாலா இயக்குநராகி இருக்க வேண்டும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இசைஞானி இளையராஜாவை இணைத்துக் கொண்டது தான். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன், பார்த்தேன். சில இடங்களில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.
தயாரிப்பாளர் நட்பை பற்றி குறிப்பிட்டார் வேறு துறையில் நட்பு இருக்கிறதா, இல்லையா என எனக்குத் தெரியாது. ஆனால் சினிமா துறை போல் நட்பை போற்றும் ஒரு துறை கிடையாது.
தான் கண்டறிந்த விஷயத்தை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் ஆசை. தான் கஷ்டப்பட்டு சிறுக சேகரித்த ஒரு விசயத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும் என்பது ஒரு தயாரிப்பாளரின் ஆசை. சினிமாவை எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அது ஆக சிறந்ததாகவே இருக்கிறது. இதற்கு நட்புதான் அடித்தளம். சினிமா என்பது மிகப்பெரிய நட்பு சமுத்திரம்.
இந்தத் திரைப்படம் மிக முக்கியமான படம். கதாசிரியனும் இந்த சமூகத்திற்கான மனநல மருத்துவன் தான். நல்ல படங்கள் இந்த சமூகத்திற்கு ஒரு தெரபி, சமூகத்திற்காக இப்படி சிந்திக்கும் தெரபிஸ்ட்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை.
கடந்த 30 வருடமாக இந்த சினிமாவில் நான் புரிந்து கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் முக்கோணம் என்ற ஒரு வடிவத்தை பற்றி தெரிந்திருக்கும். அதில் ஐந்து வகையான முக்கோணங்கள் இருக்கிறது என்பார்கள், மூன்று பக்கமும் ஒரே அளவுள்ள முக்கோணம் தான் தனித்துவமானது. அதேபோன்றுதான் இந்த சினிமா. தயாரிப்பாளர் - கதாசிரியர் & இயக்குநர் - தொழில்நுட்பக் கலைஞர்கள்- என இந்த மூவரும் சமமாக இருந்தால் படைப்பு நன்றாக இருக்கும்.
எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன. ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள். இது என்னுடைய கணிப்பு," என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், "எழுத்தாளர் அஜயன் பாலாவின் பல வருட கனவு இயக்குநராக வேண்டும் என்பது. அது இன்று நனவாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எழுதிய நிறைய புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். அஜயன் பாலா மீதான நட்பின் காரணமாகவே இங்கு அனைவரும் வருகை தந்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.
அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சீமான் திரைப்படங்களை பார்வையிட்டு தன் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார். இது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. அதனால் அவரிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன் ஊடகங்களால் நல்ல படைப்புகள் என பாராட்டப்படுவதை நீங்கள் அவசியம் பார்த்து உங்களுடைய கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக உங்களைப் பின்பற்றுபவர்கள் அந்த படத்தை பார்த்து வெற்றி பெறச் செய்வார்கள். அதனால் தொடர்ந்து சிறிய படங்களுக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், "எட்டு மாதத்திற்கு முன்பு மயிலாஞ்சி என்று ஒரு படம் வந்தது. இது மைலாஞ்சி. நீண்ட நெடிய பயணத்திற்குப் பின் இயக்குநராகி இருக்கும் அஜயன் பாலாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
1976ம் ஆண்டில் கோயம்புத்தூரில் நான் தான் முதல் மாணவன். எனக்கு கோவை மருத்துவக் கல்லூரியிலும், கோவை வேளாண்மை கல்லூரியிலும் படிப்பதற்கான இடம் கிடைத்தது. ஆனால் 4500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அதற்கு என் தந்தையிடம் பணம் இல்லாததால் என்னால் மருத்துவராக முடியவில்லை. இது தொடர்பாக எனது தந்தையிடம் பேசும் போது 'நீ எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆளாக வருவாய்' என்றார். என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். அவரை கம்யூனிஸ்ட்டாக மாற்றியவர் பாவலர் வரதராஜன். அதன் பிறகு அவரிடம் உங்களால் எவ்வளவு கட்டணத்தை கட்ட முடியும் என கேட்டேன். அவர் 150 ரூபாய் என்று சொன்னதால், உடனே அரசு கல்லூரியில் 140 ரூபாய் செலுத்தி தாவரவியல் பட்டப் படிப்பில் சேர்ந்தேன்.
அஜயன் பாலாவிற்கு இந்தப் படத்தில் இயக்குநர் வாய்ப்பு அளித்த தயாரிப்பாளரை நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் சங்கத்தின் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்று விளம்பரப்படுத்தினாலே படங்கள் வியாபாரம் ஆகிவிடும். அந்த அளவிற்கு இந்த திரைத் துறையில் ஆளுமை கொண்டவர் இசைஞானி இளையராஜா. படத்திற்கு என்ன தேவையோ அதனை அவர் சரியாக கொடுத்திருப்பார். அவருக்கு பதிலாக அவருடைய சகோதரர் கங்கை அமரன் இங்கு வருகை தந்திருக்கிறார், அவருக்கும் நன்றி.
இயக்குநர் அஜயன் பாலா எப்போதோ வெற்றி பெற வேண்டியவர். லேட் பட் நெவர். இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி," என்றார்.
ஏடிஜிபி தினகரன் பேசுகையில், "எனக்கு இந்த மேடைப் புதிது. சூழல் புதிது. ஆட்கள் புதிது. இதுதான் நான் கலந்து கொள்ளும் முதல் திரைத்துறை சார்ந்த விழா. இங்கு தயாரிப்பாளரின் நண்பனாக வருகை தந்திருக்கிறேன். அவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அர்ஜுனின் பள்ளிக்கூட தோழராக இருந்த நான் சொல்கிறேன், அவர் மருத்துவர் ஆவதற்கு கடுமையாக உழைத்தார். அவருடைய வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் நடந்து வர வேண்டும். அவரிடம் சைக்கிள் கிடையாது. நான்தான் அவரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு செல்வேன். இன்று நான் ஐபிஎஸ் அதிகாரி ஆகிவிட்டேன். அவர் மருத்துவராகி விட்டார்.
சேத்தூர் என்ற சின்ன கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர், இன்றும் அவரது வீட்டில் ஒரு ஏசி கிடையாது, ஒரு பிரிட்ஜ் கிடையாது. இப்படி ஒரு வீட்டில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி மற்றும் மகன், மகள்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
'மைலாஞ்சி' படத்தை தயாரிப்பதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதும் எனக்குத் தெரியும். பள்ளியில் படிக்கும் போதே அவர் சினிமா மீது ஆர்வம் கொண்டவர்.
இசைஞானி இளையராஜாவை பற்றி நான் பல தருணங்களில் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். காவல்துறையில் பணியாற்றும் எங்களுக்கு விடுமுறை இல்லை. ஃபோனை ஆஃப் கூட செய்ய முடியாது. வெளிநாடு சுற்றுலா செல்ல முடியாது. குடும்பத்துடன் செலவிட முடியாது. இது போன்ற சூழலில் எங்களுக்கு மிகப்பெரிய வடிகால் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தான்.
மிஷ்கின் எப்படி போலீஸ் போல் சிந்திக்கிறார் என ஆச்சரியப்படுவேன். எனக்கு அதிகாரம் இருந்தால் மிஷ்கினை சிபிசிஐடி ஆபிஸராக நியமித்து விடுவேன்.
சீமானை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பேச்சில் வேறு மொழி கலப்பில்லாமல் தமிழில் பேசக்கூடிய ஒரே தலைவர் அவர் தான். இதை நான் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன். தமிழை உணர்வோடு நேசிக்கக் கூடிய ஒருவராகவே சீமானை நான் பார்க்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை பார்க்கும்போது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நன்றாக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்," என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "நாம் ஒருவரை சந்தித்தால் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தான் கேட்கிறோம். மனநிலை எப்படி இருக்கிறது என்று யாரும் கேட்பதில்லை. எவ்வளவு பணம் இருந்தாலும் மனம் சரியில்லை என்றால் அது பயனற்று போகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். அதனால் மருத்துவத்திலேயே மகத்தான மருத்துவம் மனநல மருத்துவம் தான்.
மனநலத்தை சரி செய்யும் மருத்துவர் அர்ஜுன் இந்தப் படத்தை தயாரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தன் மண்ணின் மக்களுக்காக தான் பயின்ற கல்வி பயன்பட வேண்டும் என்று அவர் சேத்துரிலேயே பணத்தை பெரிதாக எண்ணாமல், மனத்தை நலப்படுத்தி வரும் மகத்தான மருத்துவர் தான் தயாரிப்பாளர் அர்ஜுன்.
என் தம்பி அஜயன் பாலா தமிழ் திரை உலகில் சிறந்த படைப்பாளிகள் அனைவரையும் சந்தித்து இருப்பார். கேரளா போன்ற மாநிலங்களில் முதலில் எழுத்தாளர்களுக்கு தான் மரியாதை. அங்கு முதலில் கதையை வாங்கிய பிறகு தான் இயக்குநர், நடிகர் போன்றவற்றை தீர்மானிப்பார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை. அஜயன் பாலா ஒரு சிறந்த எழுத்தாளர். நான் அவருடைய எழுத்தின் ரசிகன். பல தருணங்களில் நான் வாசிப்பதற்கு நேரம் இல்லாத போது தலைவர்களைப் பற்றிய சுருக்கமான எழுத்துகளை எழுதித் தருவார். தலைவர்களைப் பற்றி முன்னணி வார இதழில் கட்டுரையாக அவர் எழுதி இருக்கிறார்.
இன்றைய தலைமுறையினருக்கு அம்பேத்கர் என்றால் யார் என்று தெரிந்து கொள்வதற்கு அவர் எழுதிய புத்தகம் உதவும். அவருடைய எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கும். புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் இறுதிப் பக்கம் வரை தொடர்ந்து வாசிப்பார்கள்.
எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கியம் பொய் பேசலாம். புராணம் பொய் பேசலாம். வரலாறு உண்மையை மட்டும் தான் பேசும். அப்படி ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்யக் கூடியவர் தான் அஜயன் பாலா.
இயக்குநர் வெற்றிமாறன் புதினங்களை திரைப்படமாக்குவார். ஆனால் இப்போது ஒரு எழுத்தாளனே திரைப் படைப்பாளியாக வந்திருக்கிறார். இந்த தலைமுறையில் இதுதான் தமிழ் திரையுலகத்தில் முதன்முறை. இதற்காக அவரை பாராட்டுகிறேன்.
ஒளிப்பதிவாளர் செழியன், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா போன்ற எனக்கு நெருக்கமான உறவுகள் பலரும் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.
ஜப்பானில் நூறு வயது வரை வாழ்வது எப்படி என்று ஒரு உரையாடல் நடைபெற்ற போது, அங்குள்ளவர்கள் சிரித்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் 110 வயது உள்ளவர்கள். அவர்களிடம் எப்படி இவ்வளவு நாள் வாழ்கிறீர்கள் என கேட்டபோது, முதலில் மொழி. அதனைத் தொடர்ந்து எங்களின் இயற்கை. மூன்றாவதாக மனமகிழ்ச்சி ஆகியவற்றை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
என் தம்பி சிங்கம்புலி அருகில் இருந்தால் போதும். உங்களுக்கு எந்த நோயும் வராது. ஏனெனில் அவன் உங்களை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான்.
'வாழ்வே மாயம்' என்பது ஒரு வாழ்க்கை தத்துவம். அந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் சண்டை காட்சி இல்லாமல் ஒரு பாடல் காட்சியை வைத்து, ஒரு படத்தை இசையமைப்பாளர் ஒருவர் வெற்றி பெற செய்திருக்கிறார் என்றால் அவர் கங்கை அமரன் மட்டும்தான். அதெல்லாம் மிகப் பெரும் சாதனை.
தாய்ப்பாலும், தண்ணீரும் மலிவாக கிடைப்பதால் தான் மனிதன் அதனை மதிப்பதில்லை. இதுபோன்ற கலைஞர்கள் நம் அருகே அமர்ந்திருப்பதால் அவர்களின் மகத்துவம் புரிவதில்லை. இதுதான் இங்கு சிக்கல். அந்த வகையில் இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைவது திருமதி அகிலா பாலு மகேந்திரா கலந்து கொண்டிருப்பதால் தான். அவர்களை இங்கு சந்திக்க வைத்ததற்காக தயாரிப்பாளருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னிந்திய சினிமாவின் சிறந்த படைப்பாளியாக சிலரை தேர்வு செய்தால் அதில் பரதன், மணிரத்னம் போன்றவர்கள் இருப்பார்கள். அனைத்து படைப்பாளிகளுக்கும் அவர்களின் முதல் படைப்பில் பாலுமகேந்திரா தான் ஒளிப்பதிவாளர். அவரிடம் இருந்துதான் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு 'சிம்பொனி செல்வன்' என இளையராஜாவை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலிலும், பாடல் வரிகளை தவிர்த்து விட்டு, இசையை மட்டும் கேட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு சிம்பொனி தான். அதனால் நாங்கள் சொல்கிறோம் அவர் சிம்பொனி செல்வன் அல்ல, இசைஞானி அல்ல, இசை இறைவன். ஏன் இறைவன்? இறைவனிடம் என்ன கேட்டாலும் கொடுப்பார். எல்லோரையும் மனதார வாழ்த்துவார். அதனால்தான் அவர் இசை இறைவன்.
நான் சின்ன வயதில் படம் பார்க்கும்போது கதாநாயகனுக்கு கிடைக்காத கைத்தட்டல் இசைஞானி இளையராஜா என்று பெயர் போட்டதும் எழுந்தது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் என பெயரை போட்டதும் கைத்தட்டல் எழுந்தது என்றால் அது இளையராஜாவிற்கு மட்டும்தான்.
என் நண்பர் மு. களஞ்சியம் இயக்கிய 'பூமணி' திரைப்படத்தை நண்பர்களுடன் திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்தோம். வண்டியில் கதாநாயகியை உட்கார வைத்து கதாநாயகன் வண்டியை ஓட்டுகிறான். அந்த சூழலில் 'என் பாட்டு என் பாட்டு' எனத் தொடங்கும் பாடலை இடம்பெறச் செய்து ரசிகர்களை உற்சாகமடைய செய்தவர் இளையராஜா. அதில் 'நெஞ்சைத் துவைக்கிற ராகம் இது' என்னும் வரிகள் கடந்ததும் திரையரங்கில் அனைவரும் எழுந்து 'ஒன்ஸ்மோர்' சொன்னபோது தான் இசையின் ஆக்கிரமிப்பை, இசையின் ஈர்ப்பை நான் உணர்ந்தேன்.
'இசையால் அடைய முடியாத இன்பமும் இல்லை. இசையால் துடைக்க முடியாத துன்பமும் இல்லை' என்கிறார்கள். எல்லா நோய்க்கும் ஒரு மருந்து இருக்கிறது என்றால் அது இசைதான். அதுபோன்றதொரு இசையை இந்த மண்ணுக்கு அளித்த மகத்தான மருத்துவர்தான் என் அப்பன் இளையராஜா. மனநல மருத்துவர் தயாரித்த இந்தத் திரைப்படத்தில் குணநல மருத்துவர் இளையராஜா இசையமைத்திருப்பது சிறப்பு. இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்," என்றார்.
***