தமிழக - கேரள எல்லையான வாளையாரில் நடந்தது என்ன

தமிழக - கேரள எல்லையான வாளையாரில் நடந்தது என்ன

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கோவை அருகே உள்ள தமிழக-கேரள எல்லை கடந்த வாரம் மூடப்பட்டது. ‘அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களும் மருத்துவ உதவிக்கான வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்படும்’ என்று அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
வாளையார்

இதனிடையே, கேரளாவிலிருந்து ஆம்புலன்ஸ்கள் மூலம் தமிழர்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியானது- கொரோனா பதற்றம் காரணமாக, கேரளாவில் பணியாற்றும் தமிழக கூலித் தொழிலாளிகளை காவல்துறை அழுத்தம் கொடுத்து வெளியேற்றுவதாகப் புகார் எழுந்தது.

`என்னதான் நடக்கிறது' என்பதை அறிய நேரடியாகக் களத்தில் இறங்கி விசாரித்தோம். முதலில் வாளையார் சோதனைச் சாவடியில் பணியாற்றிவரும் அதிகாரிகளிடம் பேசினோம். ``கேரளாவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களை எல்லைக்குள் அனுமதித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆவணங்களை வைத்திருந்த தமிழர்களை சோதனை செய்துவிட்டு, தமிழகத்துக்குள் அனுமதித்தோம். ஆனால், சட்டவிரோதமாக ஆம்புலன்ஸ் மூலமாக பொதுமக்களை இங்கு அழைத்து வருகின்றனர்.

அப்படி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினோம். அதற்குள், `நாங்கள் நோயாளிகளை ஏற்றிவந்த ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திவிட்டோம்' என வதந்தியைக் கிளப்பிவிட்டனர். இதனால், கேரள போலீஸாரும் ஊடக பிரதிநிதிகளும் எல்லைப் பகுதியில் குவிந்தனர். தமிழகத்திலிருந்து யாரையுமே அனுமதிப்பதில்லை என்று தவறான தகவல்களைப் பரப்பினார்கள். கேரளாவிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் எல்லைப் பகுதியில் குவிகின்றனர்” என்றனர்.

இதையடுத்து, கேரளாவிலிருந்து வந்த மக்களிடம் பேசினோம், ``நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர், `வீட்டை பூட்டிவிட்டு உங்களது ஊருக்கே செல்லுங்கள்' என்றார். வேலை செய்யும் இடத்திலும் அதைத்தான் சொன்னார்கள்.