விஷ ஊசிப்பொட்டு செவிலியர் தற்கொலை..
சென்னை: திருவொற்றியூர் அருகே செவிலியர் ஒருவர் தனக்குத்தானே விஷ ஊசி பொட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் நந்தினி(24). இவர் திருவொற்றியூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவரது தாய், தந்தையர் மணலியில் வசித்து வர, நந்தினியும் இவரது சகோதரியும் ஓரே வீட்டில் தங்கி பணி புரிந்து வந்தனர். நேற்று(டிச,10) நந்தினியின் சகோதரி வேலைக்கு சென்றுவிட்டதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இரவில் நந்தியின் சகோதர வீட்டிற்கு வந்து பார்த்தப்போது, அவர் படுக்கையறையில் வாயில் நுரை தள்ளியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். நந்தினியின் பக்கத்தில் ஒரு ஊசியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி மருந்தை ஏற்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பக்கத்து வீட்டார்கள் உதவியுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நந்தினியை அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 2 மணியளவில் அவர் உயிரிழந்தார். தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என நந்தினி கடிதம் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குடும்ப சூழ்நிலையால் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.