சென்னையில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி! கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்!
சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் சுபாஷினி என்கிற இளம்பெண்ணை கடத்த முயன்ற சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் வெங்கடேஷ் என்பவரின் மனைவி சுபாஷினி. இவர் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை தனது கணவருடன் பைக்கில் பணிக்கு கிளம்பி சென்றுக் கொண்டிருந்தவர், கிண்டி ரயில் நிலையம் அருகே இறங்கி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவரும், முகமூடி அணிந்திருந்த ஒரு பெண்ணும் உங்களை இன்ஸ்பெக்டர் அழைத்து வர சொன்னார், வாருங்கள் என்று வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த சுபாஷினி, உடனடியாக தனது கணவருக்கு போன் செய்ய முயன்ற போது, சுபாஷினியின் கையிலிருந்த செல்போனை அவர்கள் தட்டிவிட்டுள்ளனர். சுதாகரித்துக் கொண்ட சுபாஷினி ஒடிச்சென்று ரயில்வே அலுவலகத்தில் நுழைந்த போது அந்த 2 பேரும் சுபாஷினியை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றனர்.
பட்டப்பகலில், நடுரோட்டில் நடந்த இந்த காட்சிகளைப் பார்த்த பொதுமக்களும், ரயில்வே போலீசாரும் உடனே அவர்களை நோக்கி ஒடிவருவதை பார்த்த முகமூடி அணிந்த பெண் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அவருடன் வந்த ஆண் நபர் போலீசாரிடம் சிக்கி கொண்டார்.
போலீசாரின் விசாரணையில், '' அவர் பெயர் ஜீவானந்தம் என்றும் சொந்தமாக கார் ஒட்டி வருவதாகவும், பெரம்பூரில் பெண் இன்ஸ்பெக்டர் உடையில் ஒரு பெண்ணும் கைவிலங்குடன் 45 வயதுடைய இன்னொரு பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு வில்லிவாக்கம் சென்றதாகவும் அங்கு 40 வயதுடைய மேலும் ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டு கிண்டி ரயில்நிலையம் வந்தோம் என்று தெரிவித்தார்.
அந்த பெண் இன்ஸ்பெக்டர் இங்கு, திருடி ஒருவரை பிடிக்க வேண்டும் எனக் கூறிய என்னையும் முகமூடி அணிந்த பெண்ணையும் அனுப்பி வைத்தார். இதன் பிறகு நடந்து சென்ற பெண்ணை திருடி என்று சொன்னதால் பிடிக்க முயன்ற போது போலீசில் சிக்கியதாகத் தெரிவித்தார். இவர்கள் பெண் போலீஸ் தானா என்பது கூட தனக்கு தெரியாது என கூறினார்.
இவர் கொடுத்த தகவலின் பேரில் பாலகுருவையும் ரயில்வே போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கினை கிண்டி குற்றபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெண்ணை கடத்த முயன்ற 3 போலி பெண் போலீசாரை போலீசார் தேடி வருகின்றனர்.