தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கை

தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கை

தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் தீவிரமடையத் தொடங்கியது. மாநில முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமை தொடங்கியதான் காரணத்தால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை பன்றிக்காய்ச்சலால் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 வாரத்தில் மட்டும் சுமார் 200 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றிக்காய்ச்சலை பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பன்றிக்காய்ச்சல் (ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமி) ஒரு வகையான தொற்றுநோய் ஆகும். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இருமல், தும்மல் போன்றவைகள் மூலம் எளிதாக பரவக்கூடும்.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் குறைவு தான். காய்ச்சல்,
இருமல், தொண்டைவலி போன்றவை பன்றிக்காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். அரசு மருத்துவமனைகளுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சைக்கு தேவையான டாமிஃபுளூ மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது. பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும். முறையாக சிகிச்சைப் பெற்றால் ஒருவாரத்தில் காய்ச்சல் குணமடைந்துவிடும்.
பொதுமக்கள் தானாக கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.