சென்னையில் இனி தண்ணீர் பிரச்னை இல்லை
சென்னை : வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னையின் முக்கிய நீர்ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு, அடுத்த 6 மாதங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் சூழல் உண்டாகியுள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக திகழும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பூண்டி ஏரியின் நீர் இருப்பு தற்போது 1,617 கன அடியாக உயர்ந்துள்ளது. புழல் ஏரியின் நீர் இருப்பு 960 கன அடியாகவும், சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 228 கன அடியாகவும், உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 193 கன அடியாக உயர்ந்துள்ளது. இதே போன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 23 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஏரிகளில் போதிய அளவில் தண்ணீர் உள்ளதால், அடுத்த ஆறு மாதத்திற்கு தட்டுபாடின்றி பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் சூழல் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் ஏரிகளில் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நம்பப்படுகிறது. தொடர்மழை மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து சென்னையில் குடிநீருக்கு தண்ணீர் சப்ளை 525 மில்லியன் லிட்டரில் இருந்து 650 மில்லியன் லிட்டராக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் லாரிகளில் தண்ணீர் சப்ளையும் 12,300 டிரிப்புகளில் இருந்து 7,700 டிரிப் ஆக குறைக்கப்பட்டு உள்ளது.