ஹரியானா; ஆழ்துளையில் விழுந்த சிறுமி பலி

ஹரியானா; ஆழ்துளையில் விழுந்த சிறுமி பலி

சண்டிகர்: ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்தார். மீட்கும் பணி தீவிரமாக நடந்துவந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, ஆழ்துளைக் கிணற்றில் தலைகீழாக விழுந்தார். சுமார் 50 அடி ஆழத்தில் விழுந்த சிறுமியை மீட்க தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

தலைகீழாக விழுந்ததால் அவரின் கால் மட்டும் கேமராவில் தெரிந்தது. சிறுமி சுவாசிப்பதற்காக குழியினுள் ஆக்ஸிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டது. உயிருடன் மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றின் அருகே பக்கவாட்டில் குழி தோண்டினர். மீட்கப்பட்டவுடன் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.10 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த போராட்டம், தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியானது. குழியினுள்ளேயே சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். சமீபத்தில், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சோகம் மறைவதற்குள் ஹரியானாவில் மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.