நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நகை கொள்ளை
சன் டிவியில் ஒளிபரப்பி வரும் "சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே", மேலும் சில தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் இமான் அண்ணாச்சி, இவர் சென்னை அரும்பாக்கம், ராஜீவ் காந்தி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக இமான் அடிக்கடி வெளியில் சென்று விடுவது வழக்கம். அவரது குடும்பத்தினர் கோடை விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
இந்தநிலையில் கடந்த புனித வெள்ளி தினத்தன்று தான் அணிந்திருந்த 42 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்து விட்டு தேவாலயத்திற்கு இமான் சென்றார். பின்னர் தனது நண்பர்களுடன் வெளியூர் செல்ல முடிவு செய்து நேற்று முன்தினம் அந்த நகைகளை அணிந்து செல்லலாம் என பீரோவை திறந்து பார்த்தார்.
ஆனால் பீரோவில் இருந்த நகைகளை காணவில்லை. அதனை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டனர். பீரோவின் பூட்டு உடைக்கப்படவில்லை. கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து நகையை திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகர் இமான் அண்ணாச்சி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து இமான் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழ்ப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூட கொள்ளை நடந்தது. தற்போது என்னுடைய வீட்டில் திருட்டு நடந்துள்ளது. உழைத்து சம்பாதித்த நகை விரைவில் கிடைத்து விடும்’ என தெரிவித்தார்.