என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் - நடிகை சோனா வேண்டுகோள்!
நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை சோனா. அவரது நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான கதைகள் தற்போது அவரைத் தேடிவர துவங்கியுள்ளன..
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான பச்சமாங்கா என்ற படத்தில் நடிகை சோனா அதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ட்ரைலரில் நடிகை சோனாவின் கவர்ச்சியான உடை குறித்து பலரும் சோனா இப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று செய்தி பரப்பி வருகிறார்கள். ஒரு பிரபல தமிழ் நாளிதழ் கூட "ஷகிலா வழியில் சோனா கவர்ச்சியாக நடிக்கிறார்" என்பது போன்ற செய்தியை வெளியீட்டுள்ளது. மேலும் இப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இந்தப் பச்சை மாங்கா படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார்? என்ற கேள்வியையும் நடிகை சோனா எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது,
"பச்சமாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப்படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்" என்றார்