"பூமராங்" திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அதர்வாவுடன் இணைவதற்கான காரணம் என்ன? - டைரக்டர் கண்ணன் விளக்கம்
            பூமராங் என்ற ஆயுதம் எங்கிருந்து போனதோ அதே இடத்துக்கு திரும்ப வருவதில் பிரசித்தி பெற்றது. அது 'பூமராங்' என தலைப்பிடப்பட்ட படத்துக்கும் மிகவும் பொருத்தமானது. ஆம், மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் "பூமராங்" படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கண்ணன், நடிகர் அதர்வாவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார். "தயாரிப்பு எண் 3" என்ற தலைப்பில் துவங்கப்படும் இந்த படத்தை இயக்குனர் கண்ணன் தன் மசலா பிக்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இயக்குனர் கண்ணன் கூறுகையில், "ஆம், நாங்கள் 'பூமராங்கிற்கு' பிறகு மீண்டும் இணைவதில் உற்சாகமடைகிறோம். 'பூமராங்' மிகச்சிறப்பாக உருவாகி இருப்பதில் நாங்கள் இருவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்கள் படத்தின் உரிமையை trident ஆர்ட்ஸ் ரவி அவர்கள் பெற்று இருப்பதை பெருமையாக கருதிகிறோம். மேலும், பூமராங் முடியும் முன்பாகவே அதர்வாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு எனக்கு விருப்பம் இருந்தது. அதற்கு காரணம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அவரது கவர்ச்சிகரமான மற்றும் அழகான ஹீரோ தோற்றம் மட்டுமல்ல, அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணம்.
இயற்கையாகவே, அவர் தயாரிப்பாளர்களின் வரம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறார். பூமராங் பிஸினஸ் நேரத்தில் அதை நானும் அனுபவித்திருக்கிறேன். ஆரம்பத்தில், என்னுடன் மீண்டும் வேலை செய்ய விருப்பமா? என அவரிடம் கேட்க தயக்கம் இருந்தது. ஆனால் என் சந்தேகங்களை அவர் தகர்த்தார். மேலும், அவர் நான் துரிதமாக செயலோடும் நேர்த்தியை நேசிக்கிறார் என்று கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இது இந்த படத்திலும் அதே முயற்சியுடன் உழைக்க கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. இப்போது, படம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, 'பூமராங்கில்' இருந்து வேறுபட்ட ஒரு வகை படமாக கொடுக்க முயற்சிக்கிறோம். நிச்சயமாக, அதர்வா எல்லா வகை படங்களிலும் நிரூபிக்கும் ஒரு நடிகர், எல்லா படங்களிலும் பொருந்தக்கூடியவர். ரசிகர்கள் இதயத்தில் தனி இடம் வகிக்கும் சமுத்திரகனி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "அர்ஜுன் ரெட்டி" புகழ் ரதன், பூமராங் படத்திலும் சிறப்பான இசையை கொடுத்திருந்தார். இந்த படத்திலும் அவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வதில் பெருமைப்படுகிறேன்" என்றார்.
இந்த கோடைகாலத்தில் "தயாரிப்பு எண் 3" படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள நிலையில், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
                        



        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        