பாண்டி பஜாரில் நவீன வசதிகளுடன் நடைபாதை வளாகம்: முதல்வர் திறந்து வைத்தார்

பாண்டி பஜாரில் நவீன வசதிகளுடன் நடைபாதை வளாகம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திறந்து வைத்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியான தியாகராய நகர், பாண்டி பஜாரில் ரூ.39.86 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டது. மேலும், ரூ. 19.11 கோடி மதிப்பில் 23 சீர்மிகு சாலைகளும் அமைக்கப்பட்டன.

மின்சாரம், தொலைபேசி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக் குழாய்கள் அனைத்தும் செல்லும் வகையில் முழுமையாக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று மாலை நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை மணியடித்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, அன்பழகன், துரைக்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

நடைபாதை வளாகத்தை திறந்து வைத்தபின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பேட்டரி காரில் அமர்ந்து சென்று சீர்மிகு சாலைகளை ஆய்வு செய்தனா். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, பாண்டி பஜாரில் உலகத்தரம் வாய்ந்த சாலைகளும், நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகளில் தமிழகம் 8-வது இடத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாலைகள் திறப்பு விழாவையொட்டி, பாண்டி பஜார் சாலையின் இருபுறமும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இருபுறங்களிலும் எல்இடி பல்புகள், வண்ண ஓவியங்கள், ஆங்காங்கே இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.