’வித்தைக்காரன்’ விமர்சனம்

’வித்தைக்காரன்’ விமர்சனம்
’வித்தைக்காரன்’ விமர்சனம்

’வித்தைக்காரன்’ விமர்சனம்

அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், விஜய் பாண்டி தயாரிப்பில், காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் ’வித்தைக்காரன்’ எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

மேஜிக் நிபுணரான சதீஷ், எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட பொருளாக இருந்தாலும் சரி, அதை தனது புத்தியாலும், வித்தையாலும் திருடும் திறன் படைத்தவர். அவருடைய திறமையை அறிந்த ஆனந்தராஜ், அவருடன் சேர்ந்து கடத்தல்காரர்கள் சுப்பிரமணிய சிவா மற்றும் மதுசூதன ராவ் ஆகியோரது தங்கம் மற்றும் வைரத்தை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார். கொள்ளையடித்த பொருட்களை சரிசமமாக பிரித்துக்கொள்ளலாம், என்ற ஒப்பந்தபடி சதீஷ் திருடுகிறார். ஆனால், காரியம் முடிந்த பிறகு சதீஷை கழட்டிவிட்டு விட்டு, தங்கம் மற்றும் வைரத்தை அபகரிக்க ஆனந்தராஜ் திட்டம் போட, அவரது திட்டம் பளித்ததா? , சதீஷின் வித்தை ஜெயித்ததா? என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘வித்தைக்காரன்’ படத்தின் கதை.

கதாநாயகனாக நடித்தாலும் தனது வழக்கமான காமெடி பாணியில் நடித்திருக்கும் சதீஷ், கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். கதாநாயகன் என்றாலும் ஜோடி, டூயட், ஆக்‌ஷன் என்று தன்னை முன்னிலைப்படுத்தாமல், கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்து படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன் குப்தா, கதையில் முக்கிய பங்கு வகித்தாலும், காட்சிகளில் முக்கியத்தும் இன்றி இருக்கிறார். திடீர் திடீர் என்று வரும் அவரை விட, சில காட்சிகளில் மட்டும் வரும் தாரணி கவனம் ஈர்க்கிறார்.

ஆனந்தராஜ், சுப்பிரமணி சிவா, மதுசூதன ராவ், ஜான் விஜய், பாவேல் நவகீதன், ஜப்பான் குமார், சாம்ஸ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் போட்டி போட்டு சிரிக்க வைக்கிறார்கள். குறிப்பாக ஆனந்தராஜ் செய்யும் காமெடிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. வில்லதனத்தோடு மதுசூதன ராவ் கோபமாக இருந்தாலும், அவருடன் இருக்கும் சாம்ஸ் செய்யும் அட்டகாசங்கள் சிரிப்பு சரவெடி என்றால், சுப்பிரமணிய சிவா மற்றும் டீமின் காமெடி காட்சிகள் சில இடங்களில் புஷ்பானமாக இருந்தாலும் பல இடங்களில் ஆட்டோபாமாக வெடிக்கிறது.

ஒளிப்பதிவாளர் யுவ கார்த்திக் மற்றும் இசையமைப்பாளர் வி.பி.ஆர் ஆகியோரது பணி படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. படத்தொகுப்பாளர் அருள் இளங்கோ சித்தார்த், எந்தவித குழப்பமும் இன்றி, திருட்டு சம்பவங்களை மிக சுவாரஸ்யமாக தொகுத்து படத்தை ஆர்வத்தோடு பார்க்க வைத்திருக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் கதை என்றாலும், சதீஷ் ஹீரோ என்பதற்காக முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் வெங்கி, முதல் பாதி படத்தை கொள்ளை சம்பவங்கள் மூலம் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று, இரண்டாம் பாதி படத்தை காமெடி கலாட்டாவாக கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

- சென்னை பத்திரிக்கா சிவாஜி