விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’
கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி - இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்’
இத்திரைப்படத்தில், ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து, கே ஜேஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில், நயன்தாரா நடித்த ‘அறம், ஐரா’, மற்றும் பிரபு தேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்தவரும், அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகித்தவருமான கே ஜே ராஜேஷ், தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரித்து வரும் நிலையில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் இயக்குனர் செல்வா மூலம் துணை இயக்குனராக திரைப்பயணத்தை துவங்கி, ‘அறம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இணை-துணை இயக்குனராக பணியாற்றிய பி விருமாண்டி கதை, திரைகதை, எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பெரிய கருப்பு தேவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இயக்குனர் சமுத்திரகனி, யோகி பாபு, வேலா ராமமூர்த்தி, ‘பூ’ ராம் ஆகிய பன்முகப்பட்ட கலைஞர்கள் உள்ளிட்ட பலர் நடிக்க, நடிகர் -இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாரின் தங்கை பவானி இப்படத்தில் அறிமுகமாகிறார்.
‘அடங்காதே’ பட இயக்குனர் சண்முகம் முத்துசாமி இப்படத்திற்கு வசனம் எழுத, படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் ஏற்றிருக்கிறார்.
ஒளிப்பதிவு பொறுப்புகளை சுதர்ஷன் ஏற்றுக்கொள்ள, கலை லால்குடி என் இளையராஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சண்டை காட்சிகளுக்கு பீட்டர் ஹைன் பொறுப்பேற்று இருக்கிறார்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து படத்தின் பிற முக்கிய காட்சிகள் ஹைதராபாத், சென்னை மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது