நடிகர் உதயாவின் கோரிக்கை

நடிகர் உதயாவின் கோரிக்கை

அன்பார்ந்த என் திரையுலக நடிகர் நடிகைகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் உங்கள் அன்பன் உதயாவின் பணிவான கோரிக்கை.. இன்று கொரோனா வைரஸின் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய் நிற்பது தாங்கள் அறிந்ததே... உலகப் பிரபலங்களில் பில்கேட்ஸ்லிருந்து நமது நாட்டு அம்பானி, அதானி வரை பலர் பல லட்சம் கோடிகள் இழப்புக்கு ஆளாகி இருக்கின்றார்கள் என்று ஊடகத்தின் வாயிலாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.. அதேசமயம் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் ஊரடங்கால் அன்றாட சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் எத்தனையோ பேர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பசிக்கும் ,பட்டினிக்கும் பரிதவிக்கும் பரிதாப நிலையும் இங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்... இருந்தாலும் அது எந்த அளவுக்கு போதுமானது என்றே தெரியவில்லை... பல தொழில்களை போல் திரைப்படம் தொழிலும் இதில் விதிவிலக்கல்ல... வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு பல முன்னணி நடிகர்கள் பல உதவிகளை செய்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. அதேசமயம் முன்னணி நடிகர்கள் செய்திருக்கும் உதவிகள் பெப்சி அமைப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே சென்றடையும். பெப்சி அமைப்பில் சேராத தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 3300 பேரில் 2500 பேர் துணை நடிகர்களாகவும் நாடக நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் படப்பிடிப்பிற்கோ, அல்லது நாடக அரங்கிற்கோ சென்றால் மட்டுமே சம்பளம் கிடைக்கும். அந்த வருமானத்தில் தான் அவர்கள் குடும்பத்தை வழிநடத்த முடியும். இந்த சூழ்நிலையில் ஒட்டுமொத்த ஊரடங்கால்.. துணைநடிகர்களும், நாடக நடிகர்களும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பை விட பசி பட்டினியால் தான் அதிகம் பாதித்து உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவிகள் கிடைக்க நடிகர் சங்க தனி அதிகாரியின் ஒத்துழைப்பின் பேரில்... திரு ஐசரி கணேஷ் திரு நடிகர் கார்த்தி, திரு நாசர், திரு, பொன்வண்ணன் திருமதி குட்டிபத்மினி திரு பூச்சி முருகன், திரு சூரி மற்றும் பல நல்ல உள்ளம் படைத்த நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற பண உதவி அளித்துள்ளார்கள். அதன்படி வந்திருக்கும் தொகையோ 15 லட்சத்திற்கு தான் இருக்கிறது. அதோடு பலரின் சிறு உதவியால் எங்களால் முடிந்த,கஷ்டப்படும் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு போன்றவற்றை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. இருப்பினும் அனைவருக்கும் உதவிட பற்றாக்குறை இருக்கிறது.ஆகவே தயைகூர்ந்து பிரபல முன்னணி நடிகர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்... நடிகர் சங்க உறுப்பினர்களின் பசியைப் போக்க அவர்களின் குடும்பங்கள் பட்டினி இருளிலிருந்து விலக... பெப்ஸி தொழிலாளர்களுக்கு அளித்தது போல் நடிகர் சங்கத்திற்கும் தங்களால் ஆன உதவிகளை செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.