பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா

பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா
பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா
பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா
பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா

சிங்கிள் டேக்கில் அசத்திய கோமல் சர்மா

“ஒரே படத்தில் மூன்று லட்டு கிடைத்தது” ; திகைப்பில் இருந்து மீளாத கோமல் சர்மா

தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் அறிமுகமானவர் கோமல் சர்மா. அதன்பிறகு நாகராஜசோழன் எம்எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது தமிழகம் தாண்டி மலையாளம், இந்தி என தனது எல்லைகளை விரிவாக்கியுள்ளார்.

மலையாளத்தில் தற்போது மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வரும் ‘மரைக்கார் ; அரபிக்கலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் கோமல் சர்மா.. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள இந்தப் படம் குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவனை பற்றிய படமாக உருவாகியுள்ளது. வரும் மார்ச் மாதம் இந்தப்படம் வெளியாக உள்ளது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கோமல் சர்மா கூறும்போது, “இந்த படத்திற்காக ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார் இயக்குநர் பிரியதர்ஷன். பொதுவாகவே மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரின் படங்களில் ஒருமுறையாவது நடித்து விடவேண்டும் என்பது எல்லோருக்குமே ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கு ஒரே படத்தில் அதுவும் மிகப்பிரமாண்டமான வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பாக நிறைவேறியுள்ளது என்பதை இப்போது கூட என்னால் நம்பவே முடியவில்லை. சொல்லப்போனால் ஒரு லட்டை எதிர்பார்த்த எனக்கு ஒரே படத்திலேயே மூன்று லட்டு கிடைத்தது.

அந்தப்படத்தின் படப்பிடிப்பில் நடித்த அனுபவமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்துவிட்ட மோகன்லால் சார், நான் ஒரு வளர்ந்து வரும் நடிகை என்கிற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் மிக இயல்பாக பழகினார். படத்தில் எனக்கு பெரும்பாலான காட்சிகள் அர்ஜுன் சாருடன் தான் இருந்தாலும், மோகன்லால், நெடுமுடி வேணு உள்ளிட்ட மற்ற அனைத்து நடிகர்களுடனும் நான் நடிக்கும் காட்சிகளும் இருந்தன. 

மோகன்லாலை பொருத்தவரை எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் ஓகே செய்யக்கூடியவர்.. அதனால் நானும் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கு என்னால் எந்தவித இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்பதால் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே, ஓரளவுக்கு மலையாளம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதற்காக தினசரி 2 மணி நேரம் மலையாளம் பேசி பயிற்சி எடுத்தேன். அது படப்பிடிப்பில் ஒரே டேக்கில் காட்சிகளை ஓகே செய்ய எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் கூட மலையாள புத்தகத்தை வைத்து ஏதாவது கற்றுக் கொண்டுதான் இருந்தேன். இந்த படத்தில் வரலாற்று கால உடைகள், ஆபரணங்கள், அப்போது பயன்படுத்தப்பட்ட வாள் போன்றவற்றை அணிந்துகொண்டு நடித்தது புது அனுபவமாக இருந்தது.

மரைக்கார் படத்தில் நடிக்கும்போதே மோகன்லால் சார் நடித்த இன்னொரு படமான ‘இட்டிமானி மேட் இன் சைனா’ என்கிற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அந்தப்படத்தில் நடிகை ராதிகாவின் மகளாக நடித்து இருந்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இடைவேளை நேரங்களில் நானும் ராதிகாவும் மட்டும் தமிழில் பேசிக்கொண்டே இருப்போம்.. படக்குழுவினர் எங்களை ஆச்சரியமாக பார்ப்பார்கள்.. 

இன்னொரு பக்கம் மரைக்கார் படம் முடிவடைந்ததும் இயக்குநர் பிரியதர்ஷன் இந்தியில் ‘ஹங்கமா-2’ படத்தை தொடங்கினார் இது அவர் ஏற்கனவே 2003-ல் இந்தியில் இயக்கிய ‘ஹங்கமா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.. மரைக்கார் படத்தில் எனது நடிப்பை பார்த்து  வியந்து போனவர், இந்த ‘ஹங்கமா-2’ படத்தின் மூலம் இந்தியில் நுழையும் வாய்ப்பையும் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இந்தபடத்தில் ஷில்பா ஷெட்டி, பரேஷ் ராவல் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.

அந்தவகையில் மரைக்கார் படத்தில் நடித்ததன் மூலம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தயாரித்த இன்னொரு படத்திலும், அந்த படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய இன்னொரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு தானாகவே கிடைத்தது மிகப்பெரிய விஷயம்.. கடுமையான உழைப்பு எப்போதும் வீண் போகாது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன்” என்கிறார் கோமல் சர்மா.

மலையாளம், இந்தி என திசை திரும்பியதால் தமிழ் படங்கள் இரண்டாம் பட்சம் தானா என கேட்டால் பதறுகிறார் கோமல் சர்மா.. “தமிழில் சில படங்களில் நடித்து வருகிறேன்.. சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து முறையான அறிவிப்பு வெளியாகும்” என்கிறார்.