‘லவ்வர்’ விமர்சனம் - சென்னை பத்திரிக்கா சிவாஜி

‘லவ்வர்’ விமர்சனம் - சென்னை பத்திரிக்கா சிவாஜி
‘லவ்வர்’ விமர்சனம் - சென்னை பத்திரிக்கா சிவாஜி

‘லவ்வர்’ விமர்சனம்

நாயகன் மணிகண்டனும், நாயகி ஸ்ரீ கெளரி ப்ரியாவும் கல்லூரியில் இருந்தே காதலித்து வருகிறார்கள். படிப்பு முடிந்து அவர் அவர் வேலைகளில் செட்டில் ஆக, மணிகண்டன் மட்டும் வியாபாரம் செய்யும் முயற்சியில் இறங்கி அதில் சில சிக்கல்களை சந்தித்து வருவதால் விரக்தியோடு இருக்கிறார். இதற்கிடையே, தனது காதலி மீது சந்தேகப்படும் அவர், அவர் மீது அதிகமான உரிமை எடுத்துக்கொண்டு அவருக்கு தொல்லை கொடுக்கிறார். மணிகண்டனின் அன்புத்தொல்லையை தாங்க முடியாத ஸ்ரீ கெளரி ப்ரியா, ஒரு கட்டத்தில் மணிகண்டனின் காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்ய, மணிகண்டன் எதை எப்படி எடுத்துக் கொள்கிறார், என்பது தான் ‘லவ்வர்’ படத்தின் மீதிக்கதை.

’குட் நைட்’ படத்தில் ரசிகர்கள் ரசிக்கும்படி நடித்திருந்த மணிகண்டன், இதில் அவர் மீது கடும்கோபம் வரும்படி கரடு முரடாக நடித்திருக்கிறார். காதலி மீது அவர் காட்டும் அதீத உரிமையின் வெளிப்பாட்டை தனது நடிப்பு மூலம சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பவர், காதலி பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகள் மிரட்டல்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ கெளரி ப்ரியா, காதலனின் அன்புத்தொல்லையால் அவமானப்பட்டு துடிக்கும் இடங்களிலும், காதலன் பிரிவால் கதறும் இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரிணி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்தி திரைக்கதையோட்டத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் இளமை ததும்படி இருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை கச்சிதமாக ரசிகர்களிடம் கடத்தியிருக்கிறது.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் மெலோடி. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

மனிதர்களின் உறவுச் சிக்கலை கருவாக எடுத்துக்கொண்டு அதை காதல் ஜோடிகள் மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் பிரபுராம் வியாஸ், இளைஞர்களுக்கு ஏற்றபடி திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

வழக்கமான பாணியிலான காதல் கதையாக அல்லாமல், காதலின் மறுபக்கத்தையும், மனிதர்களின் உறவுச் சிக்கல்களையும் மிக அழகாக கையாண்டு, அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.

- சென்னை பத்திரிக்கா சிவாஜி