’இ மெயில்’ விமர்சனம் - சென்னை பத்திரிக்கா சிவாஜி

’இ மெயில்’ விமர்சனம் - சென்னை பத்திரிக்கா சிவாஜி
’இ மெயில்’ விமர்சனம் - சென்னை பத்திரிக்கா சிவாஜி

’இ மெயில்’ விமர்சனம்

அடுக்குமாடி குடியிருப்பில் எதிர் எதிர் வீட்டில் வசிக்கும் நாயகன் அசோக் மற்றும் நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் காட்டும் ராகினி திவேதி, தனது செல்போனில் வரும் ஆன்லைன் விளையாட்டு ஒன்றின் லிங்கை கிளிக் செய்து விளையாடுகிறார். அப்போது அவர் தேர்வு செய்யும் நபர் இறந்து விட்டால் அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு என்ற அறிவிப்பு வருகிறது. அதன்படி, அவர் ஒரு நபரை தேர்வு செய்ய, அந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிப்பு வருவதோடு, அதற்கான பரிசாக ரூ.1 லட்சம் கொரியர் மூலம் அவருக்கு கிடைக்கிறது.

இதனால் தொடர்ந்து அந்த விளையாட்டை ராகினி திவேதி விளையாட, ஆனால் அவர் எதிர்பார்த்த பணம் அவருக்கு கிடைக்காமல் போவதோடு, அவர் மீது கொலை பழியும் விழுகிறது. அதில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், ஒருவரிடம் இருக்கும் ஒரு ஹார்ட்டிஸ்க்கை கைப்பற்றி கொடுக்க வேண்டும், என்று மர்ம நபர் மிரட்டல் விடுக்கிறார். அந்த நபர் யார்?, அவருக்கு அடிபணிந்து அந்த ஹார்ட்டிஸ்கை ராகினி திவேதி கைப்பற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ராகினி திவேதி, காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் ரசிகர்களை கிரங்கடிக்கும் வகையில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அதேபோல், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்து அசத்தியிருக்கிறார். கவர்ச்சி மற்றும் ஆக்‌ஷன் இரண்டும் தனது பலம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கும் ராகினி திவேதியின் நடிப்பிலும் குறையில்லை.

கதாநாயகனாக நடித்திருக்கும் அசோக், ஆரம்பத்தில் அன்பான கணவராக வந்தாலும், அதன் பிறகு அவர் எடுக்கும் அவதாரம் எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும் வகையிலும் பயணித்திருக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் பில்லி முரளி, வில்லியாக நடித்திருக்கும் ஆர்த்தி ஸ்ரீ, ஆதவ் பாலாஜி ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். மனோ பாலா மற்றும் மனோகர் ஆகியோர் வரும் காட்சிகள் கலகலப்பு.

எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கவாஸ்கர் அவினாஷின் இசையில் பாடல்கள் கேட்கும்படியும், ஜுபினின் பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது.

முதல் படத்திலேயே தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பணியை ஒருசேர பார்த்திருக்கும் எஸ்.ஆர்.ராஜன், தான் சொல்ல வந்த விசயத்தை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.

ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை பாடம் எடுப்பது போல் சொல்லாமல், கமர்ஷியலாக சொல்லி ரசிக்க வைத்திருப்பதோடு, எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி ரசிகர்களை இரண்டு மணி நேரம் சீட் நுணியில் உட்கார வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.ராஜனை தாராளமாக பாராட்டலாம்.

- சென்னை பத்திரிக்கா சிவாஜி