இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவியாளர் மீது ₹44 லட்சம் மோசடி புகார்

இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவியாளர் மீது ₹44 லட்சம் மோசடி புகார்: நீதிமன்றத்தை நாடிய தயாரிப்பு நிறுவனம்

சென்னை: இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியதாகக் கூறப்படும் எஸ்.பி. ஓஸ்மின் என்பவர், புதிய திரைப்படம் தயாரித்துத் தருவதாகக் கூறி தங்களிடம் ₹44 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக அண்ணம்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
எஸ்.பி. ஹோஸ்மின் ஏற்கெனவே ‘பிப்ரவரி 11’, ‘ஆயிரம் விளக்கு’, ‘சுமோ’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளதாக நிறுவனத்தின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ரெயின்போ’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துத் தருவதாகக் கூறி எஸ்.பி. ஓஸ்மின் ₹44 லட்சம் பெற்றதாகவும், ‘பிக் ப்ரோ’ என்ற யூடியூப் சேனலைத் தொடங்குவதாக உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், ஆறு ஆண்டுகள் கடந்தும் ஒப்புக்கொண்ட பணிகள் நடைபெறவில்லை எனவும், இதுதொடர்பாகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததாகவும் வழக்கறிஞர் சரவணன் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பு நடத்த முயன்றபோது, பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி மூன்று முறை செய்தியாளர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்குப் பின்னரும் தீர்வு கிடைக்காததால் நீதிமன்றத்தை அணுகியதாகவும், நீதிமன்றம் வழக்கைச் சமரச மையத்திற்கு அனுப்பியதாகவும் சரவணன் தெரிவித்தார். ஆனால், சமரச மையத்தில் மூன்று முறை அழைத்தும் எஸ்.பி. ஹோஸ்மின் ஆஜர் ஆகாததை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இதுபோன்ற பணப் பரிவர்த்தனைகளில் மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.