1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்

1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் ஊரடங்கை மீறி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் வருமானம் இன்றி பலர் கஷ்டப்படுகின்றனர். திரைப்பட தொழிலாளர்களும் அவதிப்படுகிறார்கள். மத்திய மாநில அரசுகள் இதற்காக நிதி திரட்டுகின்றன. ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முன்னணி இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் ஏற்கனவே கொரோனா ஒழிப்புக்கான பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார்.

இதுபோல் மும்பை போலீசாருக்கு ரூ.2 கோடியும் மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடியும் வழங்கி இருந்தார். தற்போது ஊரடங்கினால் படப்பிடிப்பு இல்லாமல் வருமானம் இன்றி கஷ்டப்படும் சினிமா கலைஞர்களுக்கு வங்கி கணக்கில் பணம் போட்டு இருக்கிறார். மொத்தம் 1500 பேர் வங்கி கணக்கில் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.45 லட்சம் செலுத்தி உள்ளார்.

இதுகுறித்து மும்பையில் உள்ள சினிமா மற்றும் டி.வி நடிகர்கள் சங்கத்தின் இணை செயலாளர் அமித் பேஹல் கூறும்போது, எங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு உதவும்படி அக்‌ஷய்குமாரிடம் கோரிக்கை வைத்தோம். உடனடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தினார். மேலும் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்” என்றார்.