’பேபி & பேபி’பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
            ’பேபி & பேபி’பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஜெய், பிரக்யா நாக்ரா தம்பதி சத்யராஜுக்கு பயந்து வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்கள். குடும்பத்திற்கு ஆண் வாரிசு வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சத்யராஜுக்கு, மகன் ஜெய்க்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது தெரிய வருகிறது. அதனால், ஜெய் மீதான கோபத்தை மறந்துவிட்டு அவரை மீண்டும் ஊருக்கு வரச் சொல்கிறார். அதன்படி ஜெய் தனது மனைவி குழந்தையுடன் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு செல்ல முடிவு செய்கிறார்.
ஜோதிடத்தின் மீது தீவிர நம்பிக்கை வைத்திருக்கும் இளவரசு, ஜாதகப்படி வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதால், தன் மகன் யோகி பாபுவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். வெளிநாட்டில் யோகி பாபு சாய் தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், இளவரசு அவர் மீது கோபம் கொள்கிறார். இதற்கிடையே, பெண் வாரிசு பிறந்தால் குடும்பம் அமோகமாக இருக்கும் என்று ஜோதிடர் சொல்ல, யோகி பாபுக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. இதனால் கோபத்தை மறந்த மகன் குடும்பத்தை வீட்டுக்கு வரச் சொல்கிறார் இளவரசு. அதன்படி, தனது குடும்பத்துடன் தமிழகத்துக்கு செல்ல யோகி பாபு முடிவு செய்கிறார்.
 
ஜெய் மற்றும் யோகி பாபு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு விமானத்தில் பயணிக்கும் போது அவர்களது குழந்தைகள் மாறிவிடுகிறது. குழந்தைகள் மாறியது தெரியாமல் வீட்டுக்கு செல்பவர்கள் உண்மையை அறிந்து பதறுகிறார்கள். ஆண் வாரிசுக்காகவும், பெண் வாரிசுக்காகவும் காத்திருந்த அவர்களது குடும்பத்தில் எப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்படுகிறது, அதை அவர்கள் எப்படி சமாளித்து, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள் என்பதை கலகலப்பாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘பேபி & பேபி’.
காதல் நாயகனாக கவரப்பட்ட ஜெய் காமெடி நாயகனாக நடிப்பில் ஸ்கோர் செய்ய முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தாலும் பல இடங்களில் அவரது நடிப்பு செயற்கைத்தனமாகவே இருக்கிறது. இருந்தாலும், கூட்டத்தோடு கூட்டமாக பார்வையாளர்களை சிரிக்க வைக்க அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.
இரண்டாவது நாயகன் அந்தஸ்த்தில் படம் முழுவதும் வரும் யோகி பாபு, படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். தனது வழக்கமான பாணியில் உடல் கேலி வசனங்களை அள்ளித் தெளித்திருந்தாலும், அவற்றைப் பற்றி யோசிக்காமல் ரசிகர்கள் சிரித்து விடுகிறார்கள்.
 
நாயகிகளாக நடித்திருக்கும் பிரக்யா நாக்ரா மற்றும் சாய் தன்யா இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
சத்யராஜ் தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். இளவரசு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக வெடிக்கிரது.
ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்ரி கோஸ், ராமர், தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரதோஷ் ஆகிய நட்சத்திரங்களால் திரையரங்கு சிரிப்பு திருவிழாவாக மாறிவிடுகிறது.
டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை ரகம். பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் டி.பி.சாரதி படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
 
எழுதி இயக்கியிருக்கும் பிரதாப், மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன், காமெடியை மட்டுமே நம்பி பயணித்திருக்கிறார். படம் முழுவதும் காமெடி மசாலாவை தெளித்து, படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார்.
சில இடங்களில் காமெடி என்ற பெயரில் சில நடிகர்கள் கடிக்கச் செய்தாலும், சத்யராஜ், யோகி பாபு, சேசு, இளவரசு போன்றவர்கள், அவர்களிடம் இருந்து பார்வையாளர்களை காப்பாற்றி, அவர்கள் ஏற்படுத்திய கடி ரணத்தை மறக்கடித்து சிரிக்க வைத்துவிடுகிறார்கள்.
மொத்தத்தில், ‘பேபி & பேபி’ சிரிப்பு.சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
                        



        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        