’ஆலன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ஆலன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’ஆலன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ஆலன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

சிறு வயதில் நடந்த விபத்தால் தன் கண் முன்னே பெற்றோரை பறிக்கொடுத்த நாயகன் வெற்றி, அந்த சம்பவத்தை மறக்க முடியாமல் தவிக்கிறார். தனது மன போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக ஆன்மீகத்தை தேடி வாரணாசிக்கு செல்பவர், அங்கிருக்கும் மடம் ஒன்றில் சேர்ந்து தன்னை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். 10 வருடன்களாக முழுமையான ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும் அவரது முயற்சி தோல்வியடைகிறது. காரணம், அவர் மனது வேறு ஒன்றின் மீது நாட்டம் கொண்டிருப்பது தான். அவரது மனதை அறிந்த மடத்தின் குரு, “நீ எதை அதிகம் விரும்புகிறாயோ அதுவே ஆன்மீகம், எனவே உன் மனதுக்கு பிடித்ததை செய்” என்று கூறுகிறார். அதன்படி, எழுத்தாளராக வேண்டும் தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக வாரணாசியில் இருந்து தமிழகம் செல்லும் வெற்றியின் ரயில் பயணத்தில் ஜெர்மனி நாட்டு பெண் மதுராவின் நட்பு கிடைக்கிறது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீது பற்றுக் கொண்ட மதுரா, வெற்றியுடன் நட்பாக பழகி பிறகு அவரை காதலிக்க தொடங்குகிறார். மதுராவின் காதலால் தனது துறவி வாழ்க்கையை விடுத்து சகஜமான நிலைக்கு வெற்றி திரும்புவதோடு, தனது விருப்பமான எழுத்து துறையிலும் ஈடுபடுகிறார். 

 

வெற்றி, மதுரா இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யும் நேரத்தில், தனது பணியின் காரணமாக மதுரா ஒருவாரம் பாண்டிச்சேரி செல்ல வேண்டி வருகிறது. வெற்றி கதை எழுதிவதில் ஈடுபட்டிருப்பதால், மதுரா மட்டும் தனியாக பாண்டிச்சேரி செல்வதோடு, தான் திருப வரும்போது ஒரு சர்பிரைஸ் காட்திருப்பதாகவும் வெற்றியிடம் சொல்லிவிட்டு செல்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக மதுரா உயிரிழக்க, அதனால் மீண்டும் மனபோராட்டத்திற்கு ஆளாகும் வெற்றி, தனது எழுத்து துறையில் சாதித்தாரா?, மதுரா வெற்றிக்கு வைத்திருந்த சர்பிரைஸ் என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் வெற்றி படத்தின் பெரும்பாலான காட்சிகளில் துறவியாகவே வலம் வருகிறார். நிதானமான வசன உச்சரிப்பு, பதற்றம் இல்லாத உடல் மொழி என்று ஒரு துறவியின் தெளிவையும், பொறுமையையும் தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பவர், காதல் வயப்படும் போது தனது உடலிலும், முகத்திலும் வெளிப்படுத்தும் வெட்கம் அட்ரா சக்க நடிப்பு.

 

ஜனனி தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் வெளிநாட்டு பெண் மதுரா, சிரித்த முகத்தோடு அழகாக வலம் வருகிறார். அவர் வெற்றியுடன் கொஞ்சு தமிழில் பேசும் போது, அவரது பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. 

 

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அனு சித்தாரா பார்க்க...பார்க்க.., பார்க்க தூண்டும் அழகியாக வலம் வருகிறார். உடல் எடையை சற்று குறைத்தால் இளம் ஹீரோக்களுடன் காதல் டூயட் பாடலாம், இல்லை என்றால் அண்ணி, அக்கா வேடங்களில் நடிக்க மட்டுமே கூப்பிடுவார்கள். அவரது அளவான நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் அருவி மதன், அவரது நண்பராக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, மடத்தின் குருவாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி என அனைவரும் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் புதிய முகங்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலினின் கேமரா ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் காட்சிகளை பிரமாண்டமாகவும், காதலை வெளிப்படுத்தும் காட்சிகளை அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறது. காதல் கதை என்றாலும் கதைக்களத்திற்கு ஏற்ப பிரமாண்டமான லொக்கேஷன்களை பிரமிக்க வைக்கும் அளவுக்கு படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் மனோஜ் க்ரிஹனா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் சிவா.ஆர், காதல் கதை அழகியோடு மட்டும் இன்றி ஆன்மீகத்தோடும் சொல்லியிருக்கிறார். காதல் தான் கதையின் மையப்புள்ளி என்றாலும், “நீ எதை அதிகம் விரும்புகிறாரோ அதுவே ஆன்மீகம்” சிறப்பான தத்துவத்தை திரைக்கதையின் ஆணிவேறாக்கி ரசிகர்களின் மனங்களை வென்றிருக்கிறார்.

 

பல குழப்பங்களோடு சுற்றி திரியும் ஒரு மனிதனின் வாழ்க்கையை காதல் எப்படி தெளிந்த நீரோடையாக்குகிறது என்பதையும், பழிவாங்குதல் தேவையற்ற செயல், அதன் மூலம் எவருக்கும் எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை என்ற உண்மையையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சிவா.ஆர், காதல், ஆன்மீகம், எழுத்து என மூன்றையும் மிக நேர்த்தியான திரைக்கதை மூலம் ஒன்று சேர்த்து மிக அழகான படைப்பாக கொடுத்து அனைத்து தரப்பினரிடையும் பாராட்டு பெறுகிறார்.

 

முதல் படத்திலேயே மனிதர்களின் மனதோடு பேசும் ஒரு திரைப்படத்தை கமர்ஷியலாக கொடுத்தாலும் அதை அழகியலோடும், நாகரீகமாகவும் இயக்கியிருக்கும் இயக்குநர் சிவா.ஆர் அவர்களுக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.