ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை 

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை 
ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை 

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை 

 

2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் நிலவிய முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சி நிர்வாகிகளை உச்சபட்சப் பொறுப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசனே முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. ரஜினி தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே  தெரிவித்து இருந்தார். இதற்கேற்ப கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ளனர். 

இந்த நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முன்னோட்டமாக தற்போது திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. 

விஜய்  முதலமைச்சர் என்று சொல்லும் வகையில் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா புகைப்படங்களுடன் விஜய் புகைப்படத்தை அச்சிட்டு, இருபெரும் தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வரும், இளம் தலைவரே நாளைய தமிழக முதல்வரே, 2021 உங்கள் தலைமையில் அமையட்டும், தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்... என போஸ்டர் அச்சிட்டு இருந்தனர். இதனை திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கத்தினர் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த நிலையில் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜயின் பனையூர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம், அரசியல் கட்சி குறித்த எதிர்பார்ப்பு, குறித்து  பேசப்பட்டதாக கூறப்படுகிறது. 

நிர்வாகிகளுடன் விஜய் பேசுகையில் மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள், வழக்கம்போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும். தேவையற்ற போஸ்டர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என அவர்களிடம் விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து தனியார் டிவிக்கு விளக்கம் அளித்துள்ள விஜயின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் விஜய் ரசிகர் மன்றத்தின் சந்திப்பு எந்த அரசியல் உள்நோக்கமும் கொண்டது கிடையாது. இது ஒரு வழக்கமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார்.