மூணாறு அருகே பாம்பாறு மரப்பாலம் மாற்றப்படுமா?: எஸ்டேட் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
மூணாறு: கேரளா, இடுக்கி மாவட்டம் மூணாறு ஊராட்சி பகுதியில் தலையார் எஸ்டேட் பாம்பன்மலை டிவிஷன் உள்ளது. இங்கு தனியார் தேயிலை நிறுவனத்திற்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு தேயிலை சாகுபடி செய்யத் தொடங்கினர். இதனால் பாம்பன்மலை டிவிஷனில் தொழிலாளர்கள் வசிப்பதற்கு லயன்ஸ் வீடுகள் கட்டப்பட்டது. பின்னர் தொழிலாளர்கள் சென்று வர பாம்பாற்றின் குறுக்கே ஓரத்தில் இரும்பு தடுப்புகளுடன் மரப்பாலம் அமைக்கப்பட்டது.
தற்போதும் பொது மக்களும், தொழிலாளர்களும் இந்த மரப்பாலத்தையே போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டதால் மரச் சட்டங்கள் வலுவிழக்க தொடங்கி உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்கள் செல்வது கூட சிரமமாகி உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதியும், சரக்கு வாகனங்கள் செல்லும் வகையிலும் வலுவான பாலம் அமைக்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.