ஆம் ஆத்மி பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது... அமலாக்கத்துறை அதிரடி

ஆம் ஆத்மி பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது... அமலாக்கத்துறை அதிரடி
ஆம் ஆத்மி பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது... அமலாக்கத்துறை அதிரடி

ஆம் ஆத்மி பணமோசடி புகார்கள் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை இன்று மேலும் ஒருவரை கைது செய்துள்ளது.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் நிதியை நிர்வகித்ததாக, சன்பிரீத் சிங் என்பவரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.

டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை வழக்கின் பணமோசடி தொடர்பான விவகாரங்களை அமலாக்கத்துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்படுவோர் வரிசையில் இன்று சன்பிரீத் சிங் என்பவரும் சேர்ந்திருக்கிறார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் சன்பிரீத் சிங் கைது அமைந்துள்ளதாக, அமலாக்கத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதே வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சன்பிரீத் சிங்கை கைது செய்து இருந்தது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையும், சன்பிரீத் சிங் எதிரான பணமோசடி வழக்கின் சிபிஐ எப்ஐஆரில் இருந்தே வருகிறது.

2022 கோவா சட்டப்பேரவைத் தேர்தலின் போது கட்சிக்காக பிரச்சாரம் செய்தவர்கள், சர்வே பணி மேற்கொண்டவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட தேர்தல் களப்பணி சார்ந்த பல்வேறு செயல்பாடுகளுக்கு பணம் விநியோகம் அது தொடர்பான கணக்கு வழக்குகள் ஆகியவற்றை சன்பிரீத் சிங் நிர்வகித்தார் என்று அமலாக்கத்துறை முன்னதாக டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், பி.ஆர்.எஸ் கட்சியின் எம்.எல்.சியுமான கே.கவிதா , தொழிலதிபர் சரத் சந்திர ரெட்டி உள்ளிட்டவர்கள் டெல்லி மதுபான சந்தையில் முதன்மை இடத்தை பெற ஆம் ஆத்மிக்கு ரூ100 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கத்துறை முன்னதாக குற்றம் சாட்டியது . இதில் 45 கோடி ரூபாயை கோவா தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆம் ஆத்மி பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. ஏனைய தொகையை குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் களப்பணிகளுக்கு ஆம் ஆத்மி பயன்படுத்தியதாகவும் அந்த குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.