மக்கள் பிரச்னையை பேசுகின்ற அவையில் உள்கட்சி பிரச்னையை தீர்க்க பார்க்கிறார்கள் அதிமுகவினர்: சபாநாயகர் விளக்கம்; அவைகுறிப்பில் இருந்து நீக்க ஓபிஎஸ் கோரிக்கை
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து அவை காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வெளியேற்ற பின்பு அவையில் அமைதி திரும்பியது. அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அவை இதுவரை விதிப்படி, சட்டப்படி நடக்கிறது. இது அவர்களின் உட்கட்சி பிரச்னை. கவர்னர் இருவரை அழைத்து சேர்த்து வைத்தால் இந்த அவையை நடத்துகிற நான் யாரை எங்கு கொண்டு போய் வைக்க முடியும். நான் என்ன பண்ண முடியும். இது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிடவில்லை.
கடந்த 3 நாட்களாகவே அவையில் அதிமுக உறுப்பினர்கள் கலகம் செய்வதையே நோக்கமாக கொண்டிருந்தனர். அவர்களின் உள்கட்சி பிரச்னையை இங்கே தீர்க்க பார்க்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இது மக்கள் பிரச்னையை பேசுகின்ற இடம். அதிமுக இப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா என்று 4 அணியாக இருக்கிறது. இவர்கள் சேரவே மாட்டார்கள் என்று நினைக்க முடியாது. யாராவது வந்து சேர்த்து வைத்தால், என்ன செய்வது?. நாம் ஒன்றும் செய்ய முடியாது. முதலாளி கூப்பிட்டு உட்காருங்கள் என்று சொல்லி நான்கு பேரையும் சேர்த்து வைத்தால் நாங்க என்ன செய்ய முடியும்.
அவை முன்னவர் துரைமுருகன்: இதுபோன்ற பிரச்சினைகள் பலமுறை நடந்துள்ளது. ஆனால், சபாநாயகர்களாக இருந்தவர்கள் யாரையும் பேச அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், நீங்கள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், ஆனால் அவர்கள் முடிவு செய்தே அவைக்கு வந்திருக்கிறார்கள். வெளியேற்றப்பட்டதற்கு, அவர்களின் சொந்த நடவடிக்கை தான் காரணம்.
சபாநாயகர் அப்பாவு: அவையில் கலகம் செய்து, பேரவையை நடத்துவதற்கு இடையூறு செய்த காரணத்தால் தான் வெளியேற்றப்பட்டார்கள். வருங்காலங்களில் இதுபோன்று நடந்து கொண்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது ஜனநாயகத்துக்கு ஏற்றது அல்ல.
ஓ.பன்னீர்செல்வம்: இந்த மன்றத்தில் ஒரு கட்சியின் உள்கட்சி பிரச்னை குறித்து பேச அனுமதியளித்தது வருந்தத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்பானது தற்காலிகமானது. அது இறுதி தீர்ப்பு அல்ல. அவர்களை எப்படி பேச அனுமதி அளித்தீர்கள்.