சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ எனும் மெகா விளையாட்டு நகரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. சர்வதேச தரத்தில் அமையவுள்ள இந்த விளையாட்டு நகரத்தில் ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இங்கு நீச்சல் வளாகம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமையவுள்ளன. மேலும், இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை அருகே மெகா விளையாட்டு நகரம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ள 3 இடங்கள் குறித்த அறிக்கையை சிஎம்டிஏ அதிகாரிகள், விளையாட்டுத் துறையிடம் வழங்கினர். அதன்படி செம்மஞ்சேரி, குந்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய 3 இடங்களில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்காக சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் 105 ஏக்கர் கொண்ட காலி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் நவம்பர் 14ம் தேதிக்குள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.