இமாசலபிரதேச கவர்னர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் பணம் கேட்டது அம்பலம்

நாட்டின் பிற பகுதிகளைப் போல இமாசலபிரதேச மாநிலத்திலும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த மாநிலத்தில், சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 18 ஆயிரம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் பாதிக்கு மேற்பட்டவை பண மோசடி தொடர்பானவை.
கடந்த ஆண்டு, முதல்-மந்திரி, தலைமைச் செயலாளர் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கிய சைபர் குற்றவாளிகள், அவசர மருத்துவ சிகிச்சைக்காக பணம் வேண்டும் என்று கேட்டு பெற்றனர். இந்நிலையில் இமாசலபிரதேச கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பெயரில் பொதுமக்களிடம் பணமும் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கவர்னர் அர்லேக்கர் நேற்று, தனது பெயரில் பணம் கேட்கப்பட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், குறிப்பிட்ட போலி இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கும்படி அந்நிறுவன அதிகாரிகளை இமாசலபிரதேச போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.